அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன்.26) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடந்து முடிந்த சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் பரப்புரையின் போது, ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தமிழ்நாட்டு மாணவர்களுக்கு திமுக வாக்குறுதி அளித்தது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்விக் கனவை நிறைவேற்ற நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் அனைவரின் நிலைபாடு. காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியின் போது 2010ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நாடு முழுவதும் மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வு தமிழ்நாட்டு மாணவர்களை பொறுத்தவரை பாதிப்பை ஏற்படுத்தும்; அதை திணிக்க கூடாது என்பது தான் அதிமுக அரசின் நிலைப்பாடு.
இதற்காக அதிமுக அரசு உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியது; விலக்கும் பெற்றது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு, இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.
நீட் தேர்வை அதிமுக அரசு கடுமையாக எதிர்த்த போதும், அது இருக்கும் வரை, தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரை அத்தேர்வுக்கு தயார்படுத்தும் பணியையும் அதற்கு ஏற்றார் போன்ற பாடத் திட்டங்களை மாற்றி அமைத்ததோடு மாவட்டந்தோறும் நீட் தேர்வுக்காக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. மேலும் நீட் தேர்வு குறித்த புரிதலுக்காக வல்லுநர்களைக் கொண்டு ஒரு சிறப்பு கையேடும் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இவ்வித நடவடிக்கைகள் மட்டுமல்லாமல் அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவு மருத்துவக் கல்லூரியில் சேரவேண்டும் என்பதற்காக அதிமுக அரசால் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடும் கொண்டு வரப்பட்டது. இதனால் சுமார் 435 மாணவ, மாணவியர் மருத்துவம், பல்மருத்துவம் படிப்பில் சேர்ந்து படித்து வருகின்றனர். இவர்களது 5ஆண்டுக்கான மருத்துவக் கல்விச் செலவினை அதிமுக அரசே ஏற்றுக்கொண்டது.