சென்னை:இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அதிமுக இடைக்கால பொது செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாய் திகழ்ந்தது. சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை சட்டப்படி, நியாயமாக, சுதந்திரமாக செயல்பட்டது. குற்றவாளிகள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டனர். மக்கள் அச்சமின்றி வாழ்ந்தனர்.
இந்த விடியல் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருட்களின் கூடாரமாக மாறி உள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் சர்வ சாதாரணமாக தினசரி நடைபெறுகின்றன. குற்றவாளிகள் அச்சமின்றி சுதந்திரமாக ஆயுதங்களுடன் நடமாடி வரும் நிகழ்வுகள் அனைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகளாக வெளிவருகின்றன.
இதுபோன்ற நிகழ்வுகளினால், மக்கள் ஒருவித அச்சத்துடனேயே வாழ்கின்றனர். குறிப்பாக, பெண்கள் வீட்டிலிருந்து வெளியில் செல்லவே அச்சப்படுகின்றனர். கடந்த வாரத்தில் கோவை, திருப்பூர், சேலம், மதுரை, தாம்பரம் உள்ளிட்ட பல இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் போதைப் பொருள் கலாச்சாரம் போன்று வெடிகுண்டு கலாச்சாரமும் தலைதூக்கி உச்சத்தில் உள்ளது.