தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"பால்வளத் துறையை இனி 'பாழ்' வளத்துறை என்று மாற்றினால் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பார்கள்" - எடப்பாடி பழனிசாமி!

Edappadi condems on milk price hike: பால் மற்றும் பால் பொருள்கள் விலையேற்றத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பால் விலையேற்றத்தை கண்டித்த எடப்பாடி பழனிசாமி
பால் விலையேற்றத்தை கண்டித்த எடப்பாடி பழனிசாமி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2023, 7:01 PM IST

சென்னை:எடப்பாடி பழனிசாமி இன்று (செப்.15) பால் விலையேற்றத்தை கண்டித்து வெளியிட்ட அறிக்கையில், "நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் பதவியேற்ற 28 மாத காலத்திற்குள், மக்கள் அன்றாடப் பயன்படுத்தும் பால் மற்றும் பால் பொருள்களின் விலைகளை 8 முறை உயர்த்தி, மக்களை மேலும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.

விடியா திமுக அரசில், ஏற்கெனவே இருந்த பால்வளத் துறை அமைச்சர் நாசர் கொள்ளையடித்ததுபோக, மிச்சம் இருப்பதை நாம் அடித்துக்கொள்ளலாம் என்கிற எண்ணத்தில், புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், தொடர்ந்து ஆவினில் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

அதிமுக ஆட்சியின்போது, நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. அதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு, நாட்டில் உள்ள பிற அரசு கூட்டுறவு அமைப்புகளுக்கே சவால் விடும் அளவிற்கு ஆவின் வளர்ச்சி பெற்றது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த இந்த 28 மாதங்களில் ஆவினை அதல பாதாளத்திற்கு தள்ளிவிட்டது.

ஆவின் நிர்வாகம், பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யும் பாலுக்கான பணத்தை விநியோகம் செய்யத் தவறியதால், லட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்கள் ஆவினுக்கு பாலை கொடுக்காமல் தவிர்த்துவிட்டனர். இதன் விளைவாக 15 லட்சம் லிட்டர் பாலை தனியாருக்கு மறைமுகமாக தாரை வார்த்தது விடியா திமுக அரசு.

இவையெல்லாம் தெரியாததுபோல விளம்பர நாயகர் ஸ்டாலின் ஆவினை பிற மாநில நிறுவனங்கள் அமுக்கப் பார்க்கின்றன என்று எதுகை மோனையாக அறிக்கைவிட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார். அதிமுக ஆட்சிக் காலத்தில், அட்சய பாத்திரமாக இருந்த ஆவின், தற்போதைய விடியா திமுக ஆட்சியில் கழுதை தேய்ந்த கட்டெறும்பாகி இருக்கிறது.

பற்றாக்குறையான பால் கொள்முதலால் பல மாவட்டங்களில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்ததும், லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து சாதனை படைத்ததாக மார்தட்டிய இந்த விடியா திமுக அரசு, சத்தமில்லாமல் பச்சை நிற பால் பாக்கெட்டுக்கு 10 ரூபாய் விலை உயர்த்தியது. இதன்மூலம் திமுக தனது முழுமுதற் கொள்கையாக விஞ்ஞான ஊழலில் புது அத்தியாயம் படைத்திருக்கிறது.

தற்போது விற்பனையாகும் பச்சை நிற பாக்கெட் பாலில் கொழுப்புச் சத்து 3.5 சதவீதமும், கொழுப்பு அல்லாத இதர சத்து 8.5 சதவீதமும் குறைக்கப்பட்டிருக்கிறது. இப்படி, சத்து இல்லாத பாலை மக்களுக்கு கொடுப்பதோடு, சத்தைக் குறைத்ததன் மூலம் மறைமுகமாக லிட்டருக்கு 8 ரூபாய் விலையை அதிகரித்திருக்கிறது இந்த அரசு.

இவையெல்லாம் இந்த ஆட்சியாளர்களுக்குப் புதிதல்ல என்றாலும், ஏற்கெனவே விலைவாசி உயர்வால் சிரமமடைந்து பொருளாதாரம் நலிந்திருக்கும் மக்களின் உடல் நலத்தையும் நலிவடையச் செய்யும் வேலைகளில் இறங்கி இருக்கிறது இந்த விடியா திமுக அரசு.

அடுத்ததாக, பச்சை நிற பாக்கெட் பாலை நிறுத்தவும் இந்த அரசு முயற்சி செய்வதாக செய்திகள் வருகின்றன. இதன் முதற்கட்டமாக, சென்னையில் பச்சை பாக்கெட் பாலின் விற்பனையை 10 சதவீதம் குறைத்திருக்கிறது ஆவின் நிர்வாகம் என்று செய்திகள் தெரிய வருகின்றன. பால் விலையை உயர்த்தினால், மக்களின் நேரடி கோபத்திற்கு ஆளாக நேரிடுமோ என்பதை உணர்ந்த விடியா திமுக அரசு, வழக்கம்போல வேறு வகைகளில் பால் பொருட்களின் விலை உயர்வை ஏற்படுத்தி மக்களை வதைத்து வருகிறது.

ஒருபக்கம் பாலின் தரம் குறைந்ததோடு, கொள்முதலும் குறைவானதால், பாலின் உபபொருட்களுக்கு மிகப் பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, வெளி மாநிலத்திலிருந்து பால் பவுடர் மற்றும் வெண்ணைய்யை அதிக விலைக்கு இறக்குமதி செய்கிறார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நெய்யின் விலையை 4 முறையும், வெண்ணைய்யின் விலையை 2 முறையும், பனீர், பாதாம் பவுடரின் விலைகளை 2 முறையும் உயர்த்தி இருக்கிறார்கள். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 மாதங்கள்கூட இல்லாத நிலையில், இனிப்பு வகைகள் தயாரிக்கப் பயன்படும் நெய் மற்றும் வெண்ணைய்யின் விலைகளை பலமடங்கு உயர்த்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

விடியா அரசு, அனைத்து மக்கள் நலத் திட்டங்களின் பெயர்களையும், அவர்களின் குடும்பப் பெயருக்கு மாற்றிக்கொள்வது போல, பால்வளத் துறையையும் இனிமேல் 'பாழ்' வளத் துறை என்று மாற்றிக்கொண்டால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க உதவும். இத்தனை முறை பால் மற்றும் பால் பொருட்களின் விலைகளை உயர்த்திய விடியா திமுக அரசு, தமிழகம் முழுவதும் உள்ள பால் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவைத் தொகைகளை இதுவரை வழங்கவில்லை.

இதுகுறித்து, அதன் தோழமைக் கட்சிகள் வாய்மூடி மவுனமாக இருப்பதன் மர்மம் புரியவில்லை. ஏழை, எளிய மக்கள், குறிப்பாக பச்சிளம் குழந்தைகளின் எளிய உணவான பால் பொருட்களின் விலை உயர்வை கண்டிக்கவும் இல்லை. பால் கொள்முதலில் இருந்து விற்பனை வரை எல்லாவற்றிலும் சரிவை சந்தித்து வரும் ஆவின் நிறுவனம், மறைமுகமாக தனியார் நிறுவனங்களுக்கு துணை போகிறதோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு உடனடியாக பால் மற்றும் பால் பொருட்களின் விலையேற்றத்தை விடியா திமுக அரசு ரத்து செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் இருந்து இன்று ஊருக்கு போறிங்களா!... இதோ மெட்ரோ ரயில் கொடுத்த அப்டேட்

ABOUT THE AUTHOR

...view details