தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 20, 2020, 1:59 PM IST

ETV Bharat / state

தேனியில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி: முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: தேனி மாவட்டத்தில் ஒரு புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி, ஏழு புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று 110 விதியின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

tn assembly
tn assembly

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சட்டம், நீதித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின்கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை

1. மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்கும் பொருட்டு, 3,501 நகரும் நியாயவிலைக் கடைகள் ரூ.9.66 கோடியில் தொடங்கப்படும்.

2. கூட்டுறவு நிறுவனங்களில் உள்கட்டமைப்பு வசதியினை மேம்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு நவீன வங்கி சேவையினை அளிக்கும்பொருட்டு, மொத்தம் 105 கூட்டுறவுக் கடன் நிறுவனங்களுக்கு, 27.74 கோடி ரூபாயில் சொந்த அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும்.

3. வணிக வங்கிகளுக்கு இணையாக, புதிய வசதிகளுடன்கூடிய நவீன வங்கிச் சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிட ஏதுவாக, மொத்தம் 95 கூட்டுறவு நிறுவனங்கள், 14.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும்.

4. புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய தலைமை அலுவலகக் கட்டடங்களும், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டடமும், 17.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

5. சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டம் மஞ்சக்குட்டை ஊராட்சி செம்மடுவு கிராமத்தில் 15.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில அளவிலான புதிய கூட்டுறவுப் பயிற்சி நிலையம் அமைக்கப்படும்.

6. காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைக்கு சென்னை, தண்டையார்பேட்டையில் அந்நிறுவனத்திற்குச் சொந்தமாக உள்ள இடத்தில் ரூ.5.65 கோடியிலும், காஞ்சிபுரம் நகரிலுள்ள மற்றொரு இடத்தில் 4.15 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் இரண்டு திருமண மண்டபங்கள் கட்டப்படும்.

7. மாநிலம் முழுவதும் 189 அம்மா சிறு கூட்டுறவுச் சிறப்பங்காடிகள் கூடுதலாகத் தொடங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உணவுத் துறை

1. நெல் உலர்கலன் வசதியுடனும், நவீன நெல் சேமிப்புக் கொள்கலனுடனும்கூடிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில், 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

2. 30 வருடங்களுக்கு மேலான, சேதமடைந்த கிடங்குகளை முற்றிலுமாக அகற்றி, சென்னை ஐஐடியின் ஆலோசனை மற்றும் தொழில்நுட்பத்துடன், ஒரு லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய நவீன சேமிப்புக் கிடங்குகள் 100 கோடி ரூபாயில் கட்டப்படும்.

3. வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லினைப் பதப்படுத்தி சேமிக்கும்வகையில், 75 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன நெல் சேமிப்பு கொள்கலன்கள் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில்அமைக்கப்படும்.

4. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு வளாகங்களில் சேதமடைந்துள்ள சாலைகள் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் கான்கிரீட் சாலைகளாக அமைக்கப்படும்.

மீன் வளத் துறை

1. கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் முதல்கட்டமாகக் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் 60 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

2. கன்னியாகுமரி மாவட்டம் ஹெலன் நகர், ராஜாக்கமங்கலம், கொட்டில்பாடு ஆகிய கிராமங்களில் 39.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும்.

3. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியின் முகத்துவாரம் இயற்கைக் காரணங்களினால் பாதிக்காமல் இருக்க, 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

4. தூத்துக்குடி மாவட்ட மீன்பிடி துறைமுகத்தின் படகு அணையும் தளம் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீட்டித்து, கூடுதல் படகுகள் நிறுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்படும்.

5. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்-வடக்கு, மண்டபம்-தெற்கு கிராமங்களில் 20 கோடி ரூபாய் செலவில் மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும்.

6. கடலூர் மாவட்டம் அன்னன்கோயில், புதுக்குப்பம் கிராமங்களில் உள்ள மீன் இறங்குதளங்கள் 10 கோடி ரூபாயில் புதிய வசதிகள் ஏற்படுத்தி புனரமைக்கப்படும். மேலும், முடசலோடை கிராமத்தில் உள்ள மீன் இறங்குதளம் கூடுதல் படகுகள் நிறுத்துவதற்கு ஏதுவாக 9.50 கோடி ரூபாய் செலவில் நீட்டிக்கப்படும்.

7. காஞ்சிபுரம் மாவட்டம், புது குப்பம் மற்றும் உய்யாலி குப்பம் கிராமங்களில், 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும்.

கால்நடை பராமரிப்புத் துறை

1. 1.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 40 புதிய கால்நடை கிளை நிலையங்கள் தோற்றுவிக்கப்படும். மேலும், 3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 கிளை நிலையங்கள், கால்நடை மருந்தகங்களாகவும், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐந்து கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்துவமனைகளாகவும் தரம் உயர்த்தப்படும். மேலும், 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாகர்கோவில் கால்நடை மருத்துவமனை, 24 மணி நேரமும் செயல்படும் கால்நடை பன்முக மருத்துவமனையாகவும் தரம் உயர்த்தப்படும்.

2. கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பை வணிக ரீதியில் மேற்கொள்ளும் 1,925 பயனாளிகளுக்கு 50 விழுக்காடு மானியத்தில் தலா 1,000 கோழிக் குஞ்சுகள், ஒரு மாதத்திற்கான கோழித் தீவனம், குஞ்சு பொரிப்பகம் அமைத்துக் கொடுக்க 14.73 கோடி ரூபாய் வழங்கப்படும்.

3. 90.35 லட்சம் கால்நடைகளுக்கு 22.03 கோடி ரூபாய் செலவில் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும்.

4. ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலையத்தில் உள்ள ஆட்டம்மை தடுப்பூசி மருந்து உற்பத்திப் பிரிவு, 18.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நல் உற்பத்தி நடைமுறைகள் தரத்திற்கு தரம் உயர்த்தப்படும்.

5. தேனி மாவட்டத்தில் ஒரு புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.

கல்வித் துறை

1. உயர் கல்வித் துறை மூலம் ஏழு புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும். வரும் கல்வியாண்டு முதல் இக்கல்லூரிகள் செயல்படும்.

2. கடந்த பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கையில் வரும் கல்வியாண்டில் 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 30 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கபட்டது.

தற்போது, எழுந்துள்ள கோரிக்கையின் அடிப்படையில் ஏற்கனவே அறிவித்த 15 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்குப் பதிலாக 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், மேலும் 30 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்குப் பதிலாக 50 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும், வரும் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்படும், என்றார்.

ABOUT THE AUTHOR

...view details