சென்னையில் இருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,
விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு மக்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள், அண்ணாமலை வெளியிடும் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் குறித்து பட்டியல் வெளியிட்ட பிறகுதான் கருத்து கூற முடியும். அரசுக்கு எதிராக குறைகளை எடுத்துரைத்தாலும் எதுவும் மக்களிடத்தில் செல்வதில்லை.
சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் மக்கள் குறைகளை எடுத்துக்கூறும்போது அதனை சட்டப்பேரவையில் நீக்கி வெளியிடுகிறார்கள். நான் பேசும் கருத்துகளை சட்டப்பேரவைத் தலைவர் அனுமதிப்பதில்லை. தொடர்ந்து சட்டப்பேரவையில் இதற்கான குரலை எழுப்பி வருகிறோம்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என பலமுறை கூறியுள்ளேன். சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் அடியோடு கெட்டு விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை உள்ளிட்டவை நடந்து கொண்டு வருகிறது. விருதாச்சல சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்து, 13 மணி நேரத்திற்குப் பிறகு முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், முதலமைச்சர், சட்டப்பேரவையில் தகவல் கிடைத்த உடனே வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அந்த தகவல் அறிக்கையானது காவல் துறையினரால் பதியப்பட்டுள்ளது. சம்பவத்தை சட்டப்பேரவையில் பேசியதை கூட எடிட் செய்து தான் பொதுமக்களுக்கு வெளியிடுகிறார்கள். இதைப் பார்க்கும்போது இந்த ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சி என்பது குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அம்மா ஆட்சியின் போதும்; அம்மா ஆட்சிக்குப் பிறகும் தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரம் அதிமுக அரசால் கொடுக்கப்பட்டு வந்தது.