செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி சென்னை:2023-24ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பிறகு பேரவைத் தொடர் முடிந்தவுடன் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ''சொத்துவரி, குடிநீர் வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரிப்பு, அதிமுகவினர் மீது பொய் வழக்கு, 12ஆம் வகுப்பு தேர்வில் 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதாமல் கல்வி வளர்ச்சியில் பின்னடைவு, விவசாயிகள் நெல்கொள்முதல் முறையாக நடத்தாதது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடவிடாமல் செய்தது, நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் கிராம மக்கள் அனுமதி பெறாமல் நிலம் எடுக்கப்படுவதை கண்டித்தும் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு, அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அவை நடவடிக்கையை புறக்கணிப்பு செய்தோம்.
மின் கட்டணம், பால்விலை உயர்வு மக்களுக்கு கிடைத்த பரிசு, திட்டம் அறிவிக்கப்பட்டாலும் பெட்ரோல், டீசல் வரி வருவாய் உயர்ந்துள்ள நிலையில் வருவாய்ப் பற்றாக்குறை குறையாமல் உள்ளது. வருவாய்ப் பற்றாக்குறை பூஜ்ஜியமாக இருந்திருக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
''அதிமுக ஆட்சியில் கரோனா காலத்தில் 15 மாதங்கள் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. வரி வருவாய் இல்லை; செலவு அதிகரித்தது. கரோனா தொற்றைத் தடுக்க மருத்துவ செலவு அதிகரித்தது. தினந்தோறும் கொலை, கொள்ளை நடக்கிறது. சட்டம் ஒழுங்கு கெடுவது அன்றாட நிகழ்வாக இருக்கிறது. பாலியல் வன்கொடுமைகள் தொடர்கின்றன.
போதைப்பொருள் விற்பனை தொடர்கிறது, மகளிர் உரிமைத்தொகை அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், இப்போது தகுதி வாய்ந்தவர்களுக்கு தான் அவைகள் எல்லாம் என்கிறார்கள். என்ன அடிப்படையில் தகுதியை நிர்ணயிக்கிறீர்கள்'' என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், ''குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு வெறும் 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஒரு கோடி பேருக்கு கூட தரமுடியாது. ஏச்சு பிழைக்கும் தொழிலே சரிதானா என எம்ஜிஆர் பாட்டு போல, மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அரசின் பட்ஜெட் இது'' என குற்றம் சாட்டினார்.
அதிமுக ஆட்சியில் சிறப்பான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்றால் அந்த பெருமை ஓ. பன்னீர் செல்வத்தை தானே சாரும் என்ற கேள்விக்கு, "அதெப்படி நான்தானே முதலமைச்சராக இருந்தேன். அவர், ஒரு பகுதி தானே. அனைத்து துறைக்கும் நிதி ஒதுக்குவது மட்டுமே அவரது பணி" எனப் பதில் அளித்தார்.
இதையும் படிங்க:குடிமைப் பணிகள் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ரூ.7,500 ஊக்கத்தொகை