சென்னை:அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி இன்று (செப் 8) பசுமைவழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்ட நிலையில், வழிநெடுங்கிலும் தொண்டர்களின் வரவேற்பை ஏற்று 11.30 மணியளவில் அதிமுக அலுவலகம் வந்தடைந்தார்.
தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில், “இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி. தொண்டர்கள் ஒருங்கிணைந்து மீண்டும் கழக ஆட்சி அமைப்போம். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அதிமுக அலுவலகம் எங்கள் தரப்புக்கு தரப்பட்டுள்ளது. ஜூலை 11ஆம் தேதி தலைமை அலுவலகத்தில் புகுந்து பத்திரங்களை திருடி சென்றுள்ளனர். பிரதான எதிர்க்கட்சி புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதிமுகவில் பிளவு என்பது கிடையாது. ஒரு சிலர் மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. கட்சியின் உயர்ந்த பதவியில் இருந்தவர் கொள்ளை கூட்டத்திற்கு தலைமை தாங்குவது போல ஓ பன்னீர்செல்வம் வந்தார். கட்சி அலுவலக கதவை எட்டி உதைத்தவர்களை தொண்டர்கள் எப்படி ஏற்பார்கள். மன்னிப்பு கேட்டாலும் ஓ பன்னீர்செல்வத்தை ஏற்க முடியாது.