சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 11), கைத்தறி துணி நூல் மற்றும் கதர் துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, ’2023ஆம் ஆண்டு வழங்கப்பட வேண்டிய விலை இல்லா வேட்டி – சேலை வழங்கும் திட்டம் முழுமையாக வழங்கப்படவில்லை. நெசவாளர்களுக்கு வழங்கப்பட்ட நூல் தரமாக வழங்காததன் விளைவாக வேட்டி, சேலை வழங்க தாமதம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.
இதற்கு பதில் அளித்துப் பேசிய கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, ‘இந்தக் கேள்வியை அதிமுகவினர் தவிர யார் வேண்டுமானலும் கேட்கலாம். 2012 மற்றும் 2016 அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட வேட்டி, சேலை தரம் குறித்து யாராவது பேச முடியுமா?’ என கேள்வி எழுப்பினார். அமைச்சர் காந்தியின் இந்தப் பேச்சுக்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். அப்போது பேசிய சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘ஏற்கனவே இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, பிப்ரவரி மாதத்திற்குள் வேட்டி -சேலை வழங்கி முடிக்கப்படும் என அமைச்சர் பேசினார். அதை கேட்கும்போது பதில் சொல்ல முடியாது என்றால், எதற்காக இலாகா வைத்துள்ளீர்?’ என கேட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பேரவைத்தலைவர் அப்பாவு, ‘எதிர்கட்சி உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு உரிய பதிலை அமைச்சர் வழங்கினால் போதுமானது. ஏன் தாமதம் என உறுப்பினர் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் பதில் வழங்கினால் போதுமானது’ என்றார். இதனையடுத்துப் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ‘வேட்டி,சேலை இன்னும் வந்து சேரவில்லை என கேள்வி எழுப்பிய ராஜன் செல்லப்பாவுக்கு, அதிமுக ஆட்சியிலும் தாமதமாக வழங்கப்பட்டதையே அமைச்சர் பதிலாக சொன்னார். வேறு எதுவும் தவறாகப் பேசவில்லை’ என்றார்.