கரோனா பாதிப்பு அதிகமுள்ள 8 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவிலான ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்காக நாள் ஒன்றுக்கு 6.8 கோடி ரூபாய் செலவு ஏற்படுகிறது. தொடர்ந்து இது போன்ற பரிசோதனைகள் செய்யப்படுவதால் மாநிலத்தின் நிதி நிலைமை மோசமடைந்து உள்ளது. ஆகையால், பரிசோதனைக்கு ஏற்படும் செலவில் 50 விழுக்காடு நிதியை பிஎம் கேர்ஸ் நிதித் தொகுப்பிலிருந்து வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 66 அரசு மற்றும் 110 தனியார் பரிசோதனை மையங்கள் மூலமாக நாளொன்றுக்கு சுமார் 85 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை ஒட்டுமொத்தமாக 66 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உயிரிழப்பு விகிதம் 1.62 விழுக்காடாக உள்ளது. புதிய தொற்று பாதிப்பு ஏற்படுவது கடந்த ஜூலை மாதத்தில் 10.47 விழுக்காடாக இருந்த நிலையில், தற்பொழுது 6.2 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் எந்த மாவட்டத்திலும் 10 விழுக்காட்டுக்கும் மேல் புதிய பாதிப்புகள் ஏற்படவில்லை. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டால் இது சாத்தியமானது. அதேபோல், தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் நாட்டிலேயே அதிகபட்சமாக 90 விழுக்காடாக உள்ளது.