தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் வாகன விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி! - Trichy Accident death family relief fund

சென்னை: திருச்சியில் வாகனம் கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Edapadi Palanisamy

By

Published : Aug 19, 2019, 2:09 PM IST

திருச்சி துறையூரில் எதிர்பாராவிதமாக வாகனம் ஒன்று கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே எட்டு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"திருச்சி மாவட்டம் முசிறி அருகே பேரூர் கிராமத்தைச் சேர்ந்த 17 பேர் நேற்று (ஆகஸ்ட் 18) சிறுநாவலூர், எஸ்.என். புதூர் கிராமத்தில் நடைபெறும் விழாவிற்கு தனியார் வாகனத்தில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக வாகனம் கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்தக் கோர விபத்தில் திருச்சி மாவட்டம் முசிறி அருகே பேரூர் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைவேல் என்பவரின் மகன் குணசீலன், ஞானசீலன் என்பவரின் மனைவி குமாரத்தி, தனபால் என்பவரின் மனைவி கோமதி, முருகேசன் என்பவரின் மனைவி கயல்விழி, இளங்கோவன் என்பவரின் மகள் சிறுமி யமுனா, மகன் சிறுவன் சரண், முருகேசன் என்பவரின் மகள் சிறுமி சஞ்சனா, குணசீலன் என்பவரின் மனைவி எழிலரசி ஆகிய எட்டு பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த எட்டு நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கோர விபத்து குறித்து அறிந்தவுடன் மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டேன். இந்த விபத்தில் காயமடைந்த ஒன்பது நபர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க மருத்துவமனை அலுவலர்களுக்கு நான் உத்தரவிட்டேன். இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்து கொடுக்கவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும், சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ். வளர்மதி, மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நான் உத்தரவிட்டிருந்தேன்.

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த எட்டு நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் பணமும் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 பணமும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details