சென்னை அடையாறில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நாளை நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பானக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக மற்றும் பாஜக எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு குடியரசுத்தலைவர் தேர்தல் குழு முகவர் வானதி சீனிவாசன், குடியரசுத்தலைவர் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து எடுத்துக் கூறினார். இதில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி வன்முறைக்கு முதலமைச்சர் தான் முழுப்பொறுப்பு - சரமாரியாக சாடிய எடப்பாடி பழனிசாமி அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, "கள்ளக்குறிச்சி அருகே மாணவி இறந்ததாக சொல்லப்படுவதில் மாணவி இறந்த நாளும் மாணவியின் தாயார் சொல்லும் நாளும் வேறுபடுகிறது. மாணவி இறந்த செய்தி கேட்டு மாணவியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். என்னுடைய மகள் 10ஆம் தேதி என்னுடன் தொடர்புகொண்டுப் பேசினார்.
தாயாரிடம் ஆறுதல் கூறவில்லை:13ஆம் தேதி இறந்துவிட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், அதற்கு முன்பாகவே மாணவி இறந்துவிட்டார் என அந்தத் தாயார் தெரிவித்துள்ளார். அந்த மாணவியின் தாயாரிடம் பள்ளி நிர்வாகமோ, அரசு அலுவலர்களோ, அரசோ ஆறுதல் தெரிவிக்கவில்லை. மாணவியின் தாயாரை நேரில் சந்தித்து அரசு சார்பில் பேசியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.
இந்தச் சம்பவத்திற்கு முழுப்பொறுப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான். அவர் தலைமையில் தான் காவல் துறை உள்ளது. மூன்று நாட்களாக மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டுப் போராடி வந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த தாயார் தெரிவித்துள்ளார். தாயார் புகார் அளித்த போதே நடவடிக்கை எடுக்கத்தவறியதால் இந்த வன்முறைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது:தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. மாணவிகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலை தான் தமிழ்நாட்டில் நிலவிக்கொண்டு வருகிறது. செயலற்ற அரசாங்கம் தற்போது செயல்பட்டு வருகிறது. உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது.
மாணவி மரணம் தொடர்பாக நீதி கேட்டு மகளை இழந்த பெற்றோர் போராடி வருகின்றனர். உளவுத்துறை அதை முறையாக விசாரித்து அரசுக்குத் தகவல் கொடுத்து இருந்தால் இன்றைக்கு சின்னசேலத்தில் அசாதாரணமான சூழ்நிலை நடந்து இருக்காது.
இன்று கடலூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை முன்னாள் மாணவன் பிறந்த நாள் விழாவிற்கு அழைத்துள்ளார். நட்பு ரீதியில் அந்த பிறந்தநாள் விழாவிற்குச்சென்ற மாணவியை மிரட்டி 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். நீண்ட நாட்களாக தெரிவித்து வருகிறேன். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்று. அது தற்போது வெளிச்சம் போட்டு காட்டும் அளவுக்கு உள்ளது. திமுக ஆட்சியில் தொடர்ந்து பாலியல் வல்லுறவுகள் அதிகரித்துள்ளன.
திமுக சொன்னதை எப்போதும் செய்தது இல்லை:விசாரணை முடிவதற்கு முன்பாகவே டிஜிபி தீர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த தாய் மிரட்டப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மட்டுமே இந்தச் சம்பவம் ஏற்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பெற்றோரிடம் தமிழ்நாடு அரசு நேரடியாகச்சென்று ஆறுதல் தெரிவித்து இருக்க வேண்டும். இந்த அரசாங்கம் முறையாக செயல்படவில்லை.
திமுக சொன்னதை எப்போதும் செய்தது இல்லை. தேர்தல் நேரத்தில் வெற்றி பெற வாக்குறுதிகளை சொன்னார்கள். தற்போது அதனைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டனர். முதல் கையெழுத்து நீட் ரத்து எனத் தெரிவித்தனர். தற்போது வரை எதுவும் செய்யவில்லை. பல உயிர்களை தான் இழந்துள்ளோம். ஓ.பன்னீர்செல்வம் குறித்தான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதுகுறித்துப் பேச வேண்டாம்" என கூறினார்.
இதையும் படிங்க:'தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் நாளை முதல் ஸ்டிரைக்' - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு!