சென்னை: அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் முழுமையாக வெற்றி பெறமுடியவில்லை என்ற சூழலில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மிகவும் சோர்வாக செயல்பட்டு வருகின்றனர். பாஜக தான் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கூறும் அளவுக்கு அதிமுக பலவீனம் அடைந்து காணப்படுகிறது.
சமீபத்தில் சொத்து வரி உயர்வு, பால் கட்டண உயர்வு மற்றும் மின்கட்டண உயர்வு போன்றவை தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்டது. அப்போது கூட சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை வைத்திருக்கும் அதிமுக கேள்வி எழுப்பத் தவறிவிட்டது. இதன் காரணமாக திமுக அரசு எந்தவிதமான சலனமும் இல்லாமல் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இரண்டு மற்றும் மூன்று நாட்களாக தண்ணீர் தேங்கியது.
"சாதாரண மழைக்கே இப்படி தண்ணீர் தேங்கி இருக்கிறது. அதிமுக ஆட்சியில் பெய்தது போல மழை பெய்திருந்தால் மிகவும் கடினமாக இருந்திருக்கும்" என ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்குப் பதில் கூறிய அமைச்சர் சேகர் பாபு, "ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவராக இருந்து கொண்டு, நேரடியாக மக்களை சந்திக்கவில்லை. ஆனால், தண்ணீரை வெளியேற்றுவதற்காக அரசு செயல்படும் விதத்தைக் குறை கூறுகிறார்" என கூறினார்.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக மழையால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு ஈபிஎஸ் திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளார். குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள முகலிவாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.