சென்னை: தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் அவர் சம்பந்தப்பட்ட 8 இடங்களில் நேற்று (ஜூலை17) காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மேலும் அவரது மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்பியுமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
13 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சோதனையின் முடிவில் கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு பணம் மற்றும் சில முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், அமைச்சர் பொன்முடியையும் விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து அமைச்சர் பொன்முடியிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளது. நேற்று இரவு 9 மணியளவில் தொடங்கிய விசாரணை நள்ளிரவை கடந்து நீடித்த நிலையில், அதிகாலை 3 மணியளவில் விசாரணை நிறைவு பெற்றது. சுமார் 6 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதன்பின் அவர் வீடு திரும்பி உள்ளார். இதனிடையே, இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராக அமலாக்கத் துறை அமைச்சர் பொன்முடிக்கு சம்மன் அளித்துள்ளது என்று அவரின் வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார். விசாரணை நிறைவுபெற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் சரவணன், “அமைச்சர் பொன்முடியின் வயது 72. அவரின் வயதையும், உடல் நலத்தையும் கருத்தில் கொள்ளாமல், மனிதாபிமானம் இல்லாமல் விசாரணை நடத்துவதாக கூறி நடந்து கொண்டது அமலாக்கத் துறை.
72 வயதான ஒருவரை நள்ளிரவில் விசாரிப்பது மனித உரிமை மீறல். விசாரணை, அமைச்சர் பொன்முடிக்கு மன உளைச்சல் மற்றும் உடல் உளைச்சலை கொடுத்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையையும் மீறி அமலாக்கத் துறை மனிதத்தன்மையற்று செயல்பட்டது.