சென்னை: மதுரை மாவட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவரை, திண்டுக்கலைச் சேர்ந்த மருத்துவரிடம் லஞ்சம் பெற்றபோது, கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, அது தொடர்பாக மதுரை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் மூன்று நாட்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு, முக்கிய ஆவணங்களைக் கொண்டு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, மதுரை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சட்டவிரோதமாக அத்துமீறி சோதனையில் ஈடுபட்டு, பல்வேறு ஆவணங்களை திருடிச் சென்றதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தனர். அதில் 'யார் என்று தெரியாத சில நபர்கள் அத்துமீறி அமலாக்கத்துறை அலுவலகத்தில் புகுந்து, முக்கிய ஆவணங்களை திருடிச் சென்றதாகவும், அவர்கள் யார் என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டு இருந்தனர்.
இதையடுத்து, விசாரணை மேற்கொள்ளுமாறு டிஜிபி உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பெயரில் மதுரை மாவட்ட போலீசார், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் ஒன்று அனுப்பி இருந்தனர். அதில் 'நேரில் ஆஜராகி யார் சட்டவிரோதமாக அத்துமீறி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நுழைந்தது, இது தொடர்பாக விரிவான விளக்கத்தை அளிக்க வேண்டும்' என குறிப்பிட்டு இருந்தனர்.
இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் மதுரை மாவட்ட காவல்துறையினர் அனுப்பிய சம்மனிற்கு விளக்கம் அளித்து மீண்டும் கடிதம் ஒன்றை டிஜிபிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த கடிதத்தில், 'மதுரை மாவட்ட காவல்துறையினர் அனுப்பிய சம்மனில் முறையாக எந்த விளக்கமும் இல்லாமல், யார் அனுப்பியது என்பதும் குறிப்பிடாமல் இருந்தது.
மேலும், கடந்த செவ்வாய்கிழமைதான் போலீசார் அனுப்பிய சம்மன் தங்களுக்கு கிடைத்தது. அன்றே எப்படி தங்களால் ஆஜராக முடியும்? ஆதாரங்களைக் கேட்காமல் நேரடியாக வந்து விளக்கங்கள் அளிக்க வேண்டும் எனக் கூறுவது உள்நோக்கத்தோடு செயல்படுவதுபோல் உள்ளது. தாங்கள் என்ன மாதிரியான விளக்கங்கள் அளிக்க வேண்டும் உள்ளிட்ட முழு விவரங்கள் எதுவும் அந்த சம்மனில் குறிப்பிடவில்லை' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க:ரைஸ்மில் முதல் கோட்டை வரை..! விஜயராஜ் கேப்டன் ஆன கதை..!