தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கமலாலய ஊழியர் வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு.. ஆவணங்களை எடுத்துச் சென்ற அமலாக்கத்துறை!

ED raid: தமிழ்நாட்டில் பாஜக அலுவலக ஊழியரின் வீடு உள்பட 40 இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், முக்கிய ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர்.

அமலாக்கத்துறை சோதனை
அமலாக்கத்துறை சோதனை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 5:19 PM IST

Updated : Sep 26, 2023, 5:52 PM IST

அமலாக்கத்துறை

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உள்பட பிற மாவட்டங்களில் சுமார் 40 இடங்களில் இன்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பான புகார்களில் இந்த சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில், சென்னை தியாகராய நகர் சரவணா தெருவில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முகம் என்பவரது வீட்டில் ஐந்து பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அதேபோல், அதே அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் வசித்து வரும் ஜோதி குமார் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முகத்திற்கு நெருக்கமானவர் என்பதால், அவரது இல்லத்திலும் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜோதி குமார் பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் சுமார் 15 வருடங்களாக கணக்கீட்டாளராகப் பணிபுரிந்து வருவது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், ஜோதி குமார் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதால் பாஜக நிர்வாகிகள் மற்றும் உடன் பணியாற்றிய ஊழியர்கள் அவரது இல்லத்திற்கு வந்தனர்.

இந்த நிலையில், தியாகராய நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் காலை 7 மணி முதல் நடத்தப்பட்டு வந்த அமலாக்கத்துறை சோதனையானது தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு எஸ்.பி.ஐ வங்கி அலுவலர்களை அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவழைத்து ஆவணங்களைச் சரிபார்த்தனர்.

பின்னர் ஆவணங்களை பையில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் எடுத்துச் சென்றனர். மேலும், இந்த வழக்கு குறித்து ஏதாவது விபரங்கள் தேவைப்பட்டால் சம்மன் அனுப்பி விசாரணை செய்யப்படும் எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:“நீதிமன்ற உத்தரவை மதிக்காத ஒரு அரசு அதிகாரியாவது பணிநீக்கம் செய்ய வேண்டும்” - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை!

Last Updated : Sep 26, 2023, 5:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details