சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி உள்ளனர். கடந்த 6 நாட்களில் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 300-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் வீடியோவாகவும், எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது. இன்றுடன் விசாரணை முடிந்து உள்ள நிலையில், அவரை மருத்துவ பரிசோதனை செய்து நீதிபதி முன் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார். கடந்த 6 நாட்கள் செந்தில் பாலாஜியிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அவர் அளித்த வாக்குமூலத்தை விசாரணை அறிக்கையாக தயாரித்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் சமர்ப்பிக்க உள்ளனர்.