சென்னை:சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு பங்களா, கரூரில் அமைச்சருக்கு சொந்தமான பூர்வீக வீடு மற்றும் சென்னை தலைமைச் செயலகம் உள்ளிட்ட இடங்களில் நேற்றைய முன்தினம் (ஜூன் 13) காலை முதல் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.
இதனையடுத்து, நேற்று (ஜூன் 14) அதிகாலை அவர் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அப்போது, அவரை அழைத்துச் செல்லும் வழியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறி, அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், மருத்துவமனை முழுவதும் சென்னை காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, செந்தில் பாலாஜியை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, மருத்துவமனைக்கு நேரில் வந்து பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து, அவரை வருகிற 28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, செந்தில் பாலாஜியை 15 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தரப்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், “அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவியின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில், செந்தில் பாலாஜி கணக்கில் 1.34 கோடி ரூபாயும், அவரது மனைவி கணக்கில் 29.55 லட்சம் ரூபாயும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது அவர்கள் வருமான வரிக் கணக்கை ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு இந்த வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு பல முறை சம்மன் அனுப்பியும், ஒரு முறை கூட யாரும் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்கவில்லை. செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்துள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதனையடுத்து அவருக்கு வழங்கிய சம்மனை பெற மறுத்த செந்தில் பாலாஜி, அதிகாரிகளை மிரட்டும் தொணியில் சத்தம் போட்டார். இரு சாட்சிகள் முன்னிலையில் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ய முயற்சித்தபோது எந்த கேள்விக்கும் அவர் பதில் அளிக்கவில்லை. விசாரணைக்கும் அவர் ஒத்துழைக்கவில்லை.
அதேநேரம், வழக்கு தொடர்பான ஆதாரங்களை கலைக்கக் கூடும் என்பதால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். எனவே, அவரிடம் முழுமையாக விசாரணை நடத்த செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை நேற்று விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, இந்த மனு தொடர்பாக பதில் அளிக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கை இன்று தள்ளி வைத்தார். இந்த நிலையில், இன்று (ஜூன் 15) மீண்டும் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, “ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளதால், அவரை காவல் விசாரணைக்கு அனுமதிக்க முடியாது. எனவே, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டார். மேலும், திமுக தரப்பில் மருத்துவமனை மாற்றக் கோரிய மனு மற்றும் ஜாமீன் கோரிய மனு விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் படிங்க:V Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜி எந்த வழக்கில் கைது.. முழு பின்னணி என்ன?