சென்னை: சென்னையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் இன்று காலை முதல் மூன்று வாகனங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மார்க் மூலம் பல நூறு கோடி ரூபாயை அமைச்சர் செந்தில் பாலாஜி மறைத்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டன. இது குறித்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி சென்னை கிண்டியில் மாபெரும் பேரணியாக சென்று தமிழக ஆளுநரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், தமிழக முழுவதும் முறைகேடாக பல ஆயிரம் மதுபான கூடங்கள் இயங்குவதாகவும், இதன் மூலம் 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு, அதன் மூலம் வரும் வருமானத்தை அப்படியே எடுத்து கொள்வதாகவும், அரசுக்கு கலால் வரியாக செலுத்தாமல் அப்படியே செந்தில் பாலாஜி மற்றும் அவர் சார்ந்த நிறுவனங்களுக்கு சென்று விடுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இதனை தொடர்ந்து கடந்த மாதம் சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான உறவினர்கள், நெருக்கமான ஒப்பந்ததாரர்கள் இல்லங்கள், அலுவலகங்களில் என 40-க்கும் அதிகமான இடங்களில் எட்டு நாட்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.