அண்மையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்த மாதத்தில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 100 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில், நவம்பர் மாதம் 610 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 14.2 கிலோ உடைய மானிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது 710 ரூபாயாக உள்ளது.
விலையை தீர்மானிப்பது யார்?
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிலிண்டரின் விலை 590 ரூபாயாக இருந்தது. கச்சா எண்ணெயிலிருந்து சமையல் எரிவாயு எடுக்கப்படுவதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்பவும், அந்நிய செலாவணிக்கு ஏற்பவும் நாட்டில் சிலிண்டர் விலையை இந்தியன் ஆயில், எச்பி உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன.
மானியம் வழங்காதது ஏன்?
இதற்கு முன்பும் பலமுறை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்தாலும், அப்போது விலை ஏற்றத்துக்கு ஏற்ப மக்களுக்கு மானியம் வழங்கப்பட்டுவந்தது. ஆனால், கரோனா தொற்று காரணமாக உலக முழுவதும் போடப்பட்ட பொது முடக்கம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்ததைத் தொடர்ந்து பலருக்கும் அவற்றுக்கான மானியம் வழங்கப்படுவதில்லை.
மக்களுக்கு வழங்கப்படும் விலையும், சந்தை விலையும் ஒரே அளவில் இருப்பதால் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதால் அதன் சுமை மக்கள் மீது வைக்கப்படுகிறது. மானியம் தொடரப்படுவது குறித்து அரசு தெளிவான அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியிடவில்லை.
பொதுமக்கள் கருத்து
இது குறித்து இல்லத்தரசி பானுமதி ஈடிவி பாரத்திடம் கூறுகையில், "சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதால் நாங்கள் கடுமையான சிரமத்துக்கு ஆளாகிறோம். மாத வரவு செலவுக் கணக்கில் பற்றக்குறை ஏற்படுகிறது.
குழந்தைகளுக்கு பால் காய்ச்சுவதுகூட தயக்கத்துடன் செய்ய வேண்டியுள்ளது. கடைசியாக சிலிண்டர் வாங்கியபோது 48 ரூபாய் வங்கிக் கணக்கில் மானியம் கிடைத்து" என்றார்.
பொருளாதார வல்லுநர் கருத்து
இந்தப் பிரச்சினை குறித்து பொருளாதார வல்லுநர் வெங்கடேஷ் ஆத்ரேயா ஈடிவி பாரத்திடம் கூறுகையில், "2014 முதல் மத்திய அரசு தொடர்ந்து மறைமுக வரிகளை ஏற்றிவருகிறது. பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் குறைந்தபோதுகூட இங்கு சிலிண்டர் விலையைக் குறைக்கவில்லை.
கலால் வரியை உயர்த்தி, விலை குறைப்பின் பலனை மக்களிடமிருந்து மத்திய அரசு அபகரித்துக்கொள்கிறது. ஆனால், கச்சா எண்ணெய் விலை ஏறும்போது சமையல் விலையை அதிகரிக்கிறார்கள். இதன்மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை வசூல் செய்துவருகிறது.
சர்வதேச சந்தைக்கு ஏற்ப ஏற்றி இறக்குவதே தவறு. பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து நேர்முக வரிகளைக் குறைத்து, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிக அளவிலான வரிச் சலுகை வழங்குகிறது.
அதே நேரத்தில், மறைமுக வரியைத் தொடர்ந்து உயர்த்திவருகிறது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவதோடு மாநில அரசின் நிதி நிலையும் பாதிப்படைகிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வு பன்மடங்கு அதிகரித்துவரும் நிலையில், பெரும் பணக்காரர்களுக்கு சொத்து வரி உள்ளிட்டவற்றை ரத்து செய்துவிட்டு, சாதாரண மக்கள் மீது வரிச் சுமையை அதிகரிக்கிறது. விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில நிறுவனங்களுக்கு ஆதரவாக மட்டுமே இந்த அரசு செயல்படுகிறது" என்றார்.
இதையும் படிங்க:சிலிண்டர் விலை வீழ்ச்சி - மானியத்தொகையை நிறுத்த மத்திய அரசு திட்டம்?