தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்ஜெட் 2020-21: விவசாயிகளுக்கு என்ன செய்ய வேண்டும்? பொருளாதார நிபுணர் யோசனை! - farming

சென்னை: குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம்செய்து அதிக அளவிலான பயிர்களை நல்ல விலைக்கு கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைப்பதோடு, பொதுமக்களுக்கு குறைந்து விலையில் பொருள்கள் கிடைக்கும் எனப் பொளாதார நிபுணரும் பேராசிரியருமான ஆத்ரேயா தெரிவித்துள்ளார்.

பொருளாதார நிபுணர்
பொருளாதார நிபுணர்

By

Published : Jan 17, 2020, 6:29 PM IST

Updated : Jan 20, 2020, 10:03 AM IST

இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துவருகிறது. தற்போது நாட்டின் வளர்ச்சி குறைந்து அதே நேரத்தில் விலைவாசி உயர்ந்து தேக்கநிலையை அடைந்துள்ளோம். குறிப்பாக உணவுப் பொருள்களின் விலைவாசி மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் பயனடையப்போவதில்லை, பொதுமக்களும் பயனடையப்போவதில்லை. இது மிகவும் ஆபத்தானது, இதனை சரி செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

இந்தச் சூழ்நிலையில், 2020 - 2021ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்டு, மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்லும் வகையில் இந்த பட்ஜெட் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கவர்ச்சிகர அறிவிப்பும் நடந்ததும்

இந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்துக்கான வரிச் சலுகைகள், தொழில் துறையினருக்கான சலுகைகள், புதிய திட்டங்கள் ஆகியவற்றின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கும், அதனை நம்பியிருக்கும் ஊரகப் பகுதியினருக்கும் எந்த மாதிரியான திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என்பதும் முக்கியமானது.

2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, விவசாய ஏற்றுமதியை ஊக்குவிப்பது உள்ளிட்ட கவர்ச்சிகர அறிவிப்புகளுடன் வந்த மத்திய அரசு, உண்மையில் விவசாயிகளுக்கு என்ன செய்தது, என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக பேசிய வேளாண் பொளாதார நிபுணரும் பேராசிரியருமான ஆத்ரேயா, மத்திய அரசு தவறான பொருளாதார நடவடிக்கைகளை எடுத்துவருவதாகக் குற்றஞ்சாட்டுகிறார். விவசாயிகளுக்கு என்ன திட்டங்களை அறிவிக்க வேண்டும் எனவும் அவர் விளக்குகிறார்.

பொருளாதார நிபுணர் ஆத்ரேயா

குறையும் விவசாய வருமானம்!

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆகியவற்றால் அமைப்புசாரா துறை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது, அதன் தாக்கமே இப்போது அமைப்புசார் துறை மீது ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என மத்திய அரசு கூறிவருகிறது. ஆனால் உண்மையில் விவசாயிகளின் வருமானம் குறைந்துவருகிறது. உள்நாட்டு மொத்த உற்பத்தியில் வளர்ச்சி அடைந்தாலும், ஊரகப் பகுதியில் தனி நபர் நுகர்வு குறைந்துள்ளதை மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. தற்போதுள்ள நிலையில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது என்பது சாத்தியமில்லாதது.

கடந்த பட்ஜெட்டில் செய்தது என்ன?

கடந்த பட்ஜெட்டில், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 102 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த நிதி போதுமானதாக இல்லை என்பது ஒருபுறமிருக்க, இது வெற்று அறிவிப்பாகவே உள்ளது.

இந்தத் திட்டம் மத்திய, மாநில அரசுகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய, மாநில அரசுகளிடமே நிதி இல்லை. அதேபோல், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் போதிய அளவுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. பிரதான் மந்திரி கிசான் யோஜனா மூலமாக விவசாயிகளுக்கு ஆறாயிரம் ரூபாய் நிதி வழங்கியது தேர்தலில் வாக்குகளைப் பெறவே. அதனால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.

என்ன செய்ய வேண்டும்?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு நிதியை அதிகரிக்க வேண்டும். இதன்மூலம் மக்களுக்கு வேலை கிடைப்பதுடன், ஏரி குளங்களைப் பராமரிக்கும் பணி நடைபெறும், பயிர்களுக்கு பாசன வசதி கிடைக்கும். விவசாயிகளுக்கு நேரடியாக பணம் கொடுப்பதால் எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை. அரசின் சுமையை குறைப்பதற்காகவே மானியங்களுக்குப் பதிலாக விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது.

இதற்குப் பதிலாக குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம்செய்து அதிக அளவிலான பயிர்களை விவசாயிகளிடமிருந்து நல்ல விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும். இதன்மூலம் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைப்பதோடு, பொதுமக்களுக்கு குறைந்து விலையில் பொருள்கள் கிடைக்கும், இடைத்தரகர்களின் ஆதிக்கம் இருக்காது. நாட்டில் விலைவாசியையும் கட்டுப்படுத்த முடியும். லாபம் தரும் பொதுத் துறை நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு பதிலாக பணக்காரர்கள் மீது முறையாக வரியை அதிகரிக்கலாம்.

கடன் தள்ளுபடி

அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள்களாக விவசாயிகள் வைக்கும் முக்கியக் கோரிக்கையாக உள்ளது. பெரு நிறுவனங்களின் கடனை தள்ளுபடி செய்யும் அரசு விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அதேபோல், ஊரகப் பகுதி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும்.

கிராமப்புறங்களில் சாலைகள், சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும். ஊரகப் பகுதி வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் துறையில் புதிய தொழில்நுட்பத்தை புகுத்தவும், இதற்காக வேளாண் ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும் அரசு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Last Updated : Jan 20, 2020, 10:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details