சென்னை:மலேசியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹிஜாவு நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோரிடம் இருந்து 1 லட்சம் ரூபாய் கொடுத்தால் மாதம் 15% வட்டி தருவதாகக் கூறி, சுமார் 500 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், கடந்த நவம்பர் 3ஆம் தேதி அன்று, சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஹிஜாவு நிறுவனம் இணையதளம் (www.mypayhm.com) மூலம் வாடிக்கையாளர்களுக்கு உறுப்பினர் எண் கொடுத்து, ஆன்லைன் மூலமாகவே வாடிக்கையாளர்களின் கணக்குகளை கையாண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அந்த இணையதளம் மூலமாக எவ்வளவு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது? எவ்வளவு வட்டி வருகிறது? உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும் என்ற அடிப்படையில் பலர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்ததும், ஏராளமானோர் முதலீடு செய்த நம்பிக்கையின் அடிப்படையில் பெரும்பாலானோர் ஹிஜாவு நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்துள்ளதும் தெரியவந்தது.
இந்த மோசடி தொடர்பாக இடைத்தரகராக செயல்பட்டு வந்த சென்னை பெரியார் நகரைச்சேர்ந்த நேரு (49) என்பவரை பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்த நிலையில், கடந்த 15ஆம் தேதி தலைமறைவாக இருந்து வரும் ஹிஜாவு குழுமத்தின் தலைவர் சௌந்தரராஜன், நிர்வாக இயக்குநர் அலெக்ஸாண்டர் ஆகியோர் மீது போலீசார் மோசடி, நம்பிக்கை மோசடி, ஆவணங்களை பொய்யாக புனைந்து குற்றச்செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த மோசடி தொடர்பாக கடந்த 21ஆம் தேதி ஹிஜாவு நிறுவனத்துக்குச் சொந்தமான 21 இடங்களில் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி, ரசீதுகள் உள்ளிட்ட வழக்குத் தொடர்பான ஆவணங்கள் மற்றும் பல்வேறு டிஜிட்டல் ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஹிஜாவு நிறுவன மோசடி தொடர்பாக புதிதாக புகார் அளிக்க விரும்புவோர் www.hijaueowdsp@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுமாறும் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: விஜய்க்கு அபராதம் விதித்த போலீஸ்... பின்னணி என்ன?