சென்னை: தமிழ்நாட்டில் பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகள் தொடர்பாக விசாரணையின் நகர்வுகள் குறித்து ஐஜி ஆசியம்மாள் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்த ஆண்டு ஜனவரி முதல் மே 15ஆம் தேதி வரை 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் மோசடி செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 350 கோடி ரூபாய் ஆகும். கடந்த 2 நாட்களில் ஆருத்ரா, ஹிஜாவு மற்றும் எல்பின் ஆகிய வழக்குகளில் சுமார் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐஎஃப்எஸ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சகோதரர்களான வெங்கடேஷ் மற்றும் பிரபு ஆகியோரை காவலில் எடுத்து விசாரணை செய்ததில், 25 அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதில் வெங்கடேசன் என்பவர் 826 முதலீட்டாளர்கள் மூலமாக 171 கோடி ரூபாய் வசூல் செய்து மோசடி செய்துள்ளதாகவும், பிரபு 1,397 முதலீட்டாளர்களிடமிருந்து 129 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் ஐஎஃப்எஸ் வழக்கில் ஜானகிராமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 7,000 முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 240 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆருத்ரா கோல்ட் டிரேடிங் விவகாரம் தொடர்பாக மேலும் 3 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதுவரை மொத்தம் 61 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதில் ராஜசேகர் மற்றும் உஷா போன்ற முக்கிய குற்றவாளிகளுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு விட்டது. நேற்றைய முன்தினம் மட்டும் 8 பேர் கிளை பொறுப்பாளர்கள் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் வழக்கில் திருவள்ளுூரைச் சேர்ந்த சசிகுமார், ராணிப்பேட்டையைச் சேர்ந்த உதயகுமார், சதீஷ் நெமிலி, அசோக் குமார், செல்வராஜ், நவீன், முனுசாமி, மாலதி ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹிஜாவு வழக்கில், முரளிதரன் மற்றும் ஜெயக்குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 54 சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மேலும் 6 சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் மே 17ஆம் தேதி முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.