சென்னை: நொளம்பூர் பாரதி சாலையில் ஏ.ஆர்.டி ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆல்வின் மற்றும் ராபின். தங்க நகை சேமிப்பு, தங்க நகைக் கடன் மற்றும் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் வாரம் 3 ஆயிரம் வீதம், 1 மாதத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என கவர்ச்சிகரமான திட்டங்களை இந்நிறுவனம் அறிவித்தது. இதனை நம்பிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் லட்சக்கணக்கில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் சிவகார்த்திகேயனை வைத்து பிரமாண்டமான திரைப்படம் எடுக்கப்போவதாகக் கூறி பொதுமக்களை நம்பவைத்துள்ளனர், இந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். முதலீட்டு பணத்தில் ஏ.ஆர். மால் மற்றும் பல மாவட்டங்களில் நகைக்கடையின் கிளைகள் என தொழிலை பெருக்கியதாக கூறப்படுகிறது. சில நாட்கள் வட்டியை வாரி வீசி வந்த இந்நிறுவனம், கடந்த சில வாரங்களாக வட்டி தராமல் பல ஆயிரம் கோடிகளை சுருட்டிக் கொண்டு தலைமறைவாகி விட்டனர்.
இந்த நிறுவனத்தில் ஏமாந்த பொதுமக்கள் பலரும் நகைக்கடை, ஏ.ஆர். மால் என பல இடங்களில் முற்றுகையிட்டனர். அதன் பின்னர் அவர்களை குண்டர்களை வைத்து தாக்கியதால், வேறு வழியின்றி அனைவரும் நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து நொளம்பூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள், புகார்களை வழங்கி வருவதால், ஏ.ஆர்.டி நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆல்வின் மற்றும் ராபின் உட்பட நிர்வாகிகள் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.