தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் சார்பில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனை அறிமுகம் செய்து வைத்து பேசிய அவர், 'சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில், 525 புதிய மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்பட உள்ளது. மேலும் மின்சார கார், ஆட்டோ, பைக் வாகன பயன்பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறன்றன. இதனை கருத்தில் கொண்டு மின்சார வாகன பயன்பாடுகள் குறித்த கல்வி வழங்க 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தொழிற்பயிற்சி நிலையங்களில் 4.77 கோடி ரூபாய் செலவில், தகுதிவாய்ந்த நபர்களுக்கு மின் வாகனத் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்கான சிறப்புத் திட்டத்தை இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மேம்பாட்டுத் தேவையை நிறைவு செய்யும் வகையில், தொழிற்பயிற்சி நிலையங்களின் பயிற்றுநர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு சென்னையில் தமிழ்நாடு திறன் பயிற்சி நிலையம்1.60 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்’ என்றார்.
இது பற்றி வேலைவாய்ப்பு பயிற்சி இயக்குனரக அதிகாரிகள் தெரிவிக்கையில், மின்சார வாகனங்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆட்டோமொபைல் பொறியியல் துறையில் மின்சார வாகனங்களுக்கான பாடத் திட்டம் சேர்க்கப்பட உள்ளது.