சென்னையில்பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை (ஏப்ரல் 8) வருகிறார். பிற்பகல் 2:45 மணி அளவில் சென்னை விமான நிலையம் வரும் அவர், அங்கு கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை திறந்து வைக்கிறார். பின்னர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் கப்பற்படை தளத்துக்குச் செல்கிறார்.
மாலை 4 மணி அளவில் அடையார் ஐஎன்எஸ் கடற்படை தளத்திலிருந்து கார் மூலமாக சிவானந்தா சாலை வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்கிறார். அங்கு சென்னை - கோவை இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மட்டும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 10 ஆவது நடைமேடையில் இருந்து ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்படுவதால் 10, 11, 9, 8 ஆகிய 4 நடைமேடைகளிலும் ரயில் சேவைகள் நிறுத்தப்படுகிறது.