சென்னை: ஒன்றிய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா 2021 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதால், நாளை (ஜூலை 19) தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
நாளை மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கு முன்பு அனைத்து பிரிவு அலுவலகங்கள் முன்பும் ஆர்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்குகிறது, உணவு இடைவேளையில் கோட்ட அலுவலகம் முன்பும், மாலையில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது என தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்யப்படும் என மத்திய மின்வாரிய ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த நிலையில், மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொ.மு.ச. பொது செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
அதில், மின்சார சட்ட திருத்த மசோதா 2021 எதிர்வரும் நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளதால், ஜூலை 19ஆம் தேதி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய மின்வாரிய ஊழியர்கள் கூட்டமைப்புமுடிவின் அடிப்படையில் இந்திய நாடு முழுவதும் ஆகஸ்ட் 10 வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக தொழிற்சங்க ரீதியில் ஜூலை 27 ஆம் தேதி வேலை நிறுத்த நோட்டீஸ் மின்சார வாரியத்திற்கு கொடுப்பது என்றும் அறிவித்துள்ளனர். ஜூலை 27க்கு பின்னர் மண்டல ரீதியான கருத்தரங்குகள் நடத்துவது எனவும் அது குறித்து நோட்டீஸ் நகல் கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வன்னியர் தனி இடஒதுக்கீடு: எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்துப் போராட்டம்