கரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் எந்தவித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் திருநின்றவூரிலிருந்து சென்னை ஆவடிக்கு பணிக்காக சென்றபோது, திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்ப்பேட்டை சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி இ-பாஸ் கேட்டுள்ளனர்.
ஆனால், தான் ஒரு மின்வாரிய ஊழியர் எனவும், தனக்கு இ-பாஸ் எதுவும் அலுவலகத்தில் அளிக்கவில்லை எனவும் தெரிவித்த அவர், தான் மின்வாரிய ஊழியர் என்பதற்கான தனது அடையாள அட்டையையும் அவர்களிடம் காண்பித்தார். ஆனால் அதனை ஏற்க மறுத்த காவல் துறையினர், மின்வாரிய ஊழியரை கீழே தள்ளி தாக்கத் தொடங்கியுள்ளனர்.
மின் வாரிய ஊழியர் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டும் காவல் துறையினர் அவரை கீழே தள்ளி தாக்கத் தொடங்கிய இச்சம்பவத்தின் காணொலிக் காட்சிகள் முன்னதாக சமூக வலைதளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக செய்தித்தாள்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையத்தின் பொறுப்புத் தலைவர் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து இதனை விசாரணைக்கு எடுத்தார்.
இந்நிலையில், அத்தியாவசியப் பணிகளுக்கான மின்வாரிய ஊழியரை பணிக்கு செல்ல விடாமல் தடுத்து, அடையாள அட்டையைக் காண்பித்த பிறகும் தாக்கியது குறித்து, திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை இன்னும் நான்கு வாரங்களில் பதில் அளிக்குமாறு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அத்தியாவசியப் பணியான மின்வாரியப் பணியாளர் அடையாள அட்டை காண்பித்தும் அவரிடம் காவல் துறையினர் எப்படி இ-பாஸ் கேட்கலாம் என கேள்வி எழுப்பி, இ-பாஸ் விவகாரம் தொடர்பாக காவல் துறை அலுவலர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தவறு செய்த அலுவலர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக இன்னும் நான்கு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் எனவும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க :உடுமலை சங்கர் வழக்கு - மேல்முறையீடு செய்ய வலியுறுத்தப்படும் அரசு