சென்னை: அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தற்போது வரை 1 கோடியே 62 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனர். 60.82 விழுக்காடு மின் நுகர்வோர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். சிறப்பு முகாம் மூலம் 87 லட்சத்து 91 ஆயிரம் இணைப்புதாரர்களும், ஆன்லைன் முறையில் 74,67,000 மின் இணைப்புதாரர்களும் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 77.53 விழுக்காடு மின் நுகர்வோர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். தமிழகத்தில் குறைந்தபட்ச அளவாக கிருஷ்ணகிரியில் 50.93 விழுக்காடு அளவே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
ஜனவரி 31, 2023 வரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது 2,811 மின்வாரிய பிரிவு அலுலகங்கள் மூலம் ஆதாரை இணைப்பதற்காக சிறப்பு முகாம் நடைபெறுகிறது. ஜனவரி மாதம் கூடுதலாக 2,811 நடமாடும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. நடமாடும் சிறப்பு முகாம் மூலம் உரிய இடங்களுக்கு சென்று மின் நுகர்வோரின் ஆதாரை இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆங்கில புத்தாண்டு விடுமுறை என்பதால் நாளை சிறப்பு முகாம் நடைபெறாது. உரிய ஆவணங்களை சமர்பித்தால் 48 மணி நேரத்திற்குள் மின் இணைப்புதாரர்களின் பெயர் மாற்றம் செய்து தரப்படும். இறந்தவர்களின் பெயரில் மின் இணைப்புகள் இருக்கும்போது, இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதில் சிக்கல் உள்ளது என சொல்கின்றனர்.