சென்னையில் ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் பிரசார செயலர் வழக்கறிஞர் அருள்மொழி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "நாட்டில் எல்லோருமே நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறோம். சைக்கிள் ஸ்கூட்டர் மோதிக்கொண்டால் அதிகபட்சம் அடிதடியில் முடிவது வழக்கம். ஆனால், தற்போது சைக்கிளில் வராதவர் யார்? ஸ்கூட்டரில் வந்தவர் யார் என்றும் அவர் எந்த மதத்தை சார்ந்தவர் என்றும் பார்க்கப்படுகிறது. அப்படிதான், ஒரு சைக்கிள் ஸ்கூட்டர் சண்டை ஒரு மதக்கலவரத்தை தூண்டும் விதமாக மாற்றப்படுகிறது.
பக்குவப்பட்ட மாநிலத்தில் வேற்று மாநிலத்தைச் சார்ந்த ஒரு பெண்ணுக்கு அநீதி நடக்கிறது. அந்த பெண்ணின் தாயார் உனக்கு என்ன பிரச்னை என்று கேட்கிறார்கள். ஃபாத்திமா என்கிற என் பெயரே பிரச்னைதான்மா என்று சொல்கிறார். ஐடி நிறுவனங்களில் கம்யூனிட்டி சான்றிதழ் கேட்கிறார்கள். அதைவைத்து இன்போசிஸில் இடஒதுக்கீடு கொடுக்கப்படுகிறதா?.
ஐஐடி பல வருட காலமாக இருக்கின்றது. ஆனால், இந்த நிறுவன படுகொலை, இடஒதுக்கீடு என்பது கட்டாயப்படுத்தப்படும்போது தான் ஆரம்பிக்கிறது. நீ கட்டாயமாக உள்ள வருவீயா, உன்னை எப்படி தடுப்பது என்று எனக்குத் தெரியும் என்பதே இந்த துன்புறுத்தல்கள். இதனால் பெற்றோர்களின் மனநிலை எப்படி மாறும். ஐஐடி எல்லாம் வேண்டாம்பா, நமக்கு ஐடிஐயையே போதும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.