சென்னை:தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வடபழனி நெற்குன்றம் பகுதியில் உள்ள தி நகர் சத்யாவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தி நகர் பகுதியில் உள்ள அலுவலகத்திலும், மேலும், அவருக்கு தொடர்புடைய சென்னையில் உள்ள 16 இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சத்யாவிற்கு தொடர்புடைய 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதில் 16 இடங்கள் சென்னையிலும், கோவையில் ஒரு இடமும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக 16.33 விழுக்காடு சொத்துக்கள் குவித்துள்ளதால் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த போது சத்யாவின் சொத்து மதிப்பு ரூபாய் 2 கோடியே 21 லட்சம் மதிப்பில் 21 சொத்துக்கள் இருந்ததாகவும், ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த போது ரூ. 16 கோடியே 44 லட்சம் மதிப்புடைய 38 அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் அவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்துவரும் நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்களிடமும், சத்யாவிடமும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்களின் ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பத்திரப்பதிவு துறையின் மூலம் பெறப்பட்டு அது தொடர்பாக அவர் வீட்டில் இருக்கக்கூடிய ஆவணங்கள் என்னென்ன, மேலும் அசையா சொத்து, தங்க நகையோ, பணமோ, நிலம் வாங்கிய தொடர்பான ஆவணங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.