சென்னை: ஒரு ஆட்சி நல்லாட்சியாக அமைவதற்கு அரசியல்வாதி எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு பொறுப்பில் இருக்க கூடிய அதிகாரிகளும் முக்கியம். அவ்வாறு தான் பதவி வகித்த பல்வேறு இலாகாக்களிலும் முத்திரை பதித்தவர் தான் ஐபிஎஸ் அதிகாரி கந்தசாமி. 1989 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான கந்தசாமி பரமசிவன் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
தமிழ், இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம், ஜெர்மன் உள்ளிட்ட 5 மொழிகளை பேசும் புலமை வாய்ந்தவர் கந்தசாமி. தமிழக காவல்துறையில் கன்னியாகுமரி எஸ்.பி.யாக தனது பணியைத் துவங்கிய கந்தசாமி பின்னர் கோயம்புத்தூர், தஞ்சாவூர், நீலகிரி, தர்மபுரி உள்ளிட்ட இடங்களிலும் எஸ்.பி.யாக பணியாற்றி வந்துள்ளார். டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற கந்தசாமி மதுரை, விழுப்புரம், திருச்சி, தொழில்நுட்ப பிரிவிலும், காவல் ஆணையராக மதுரையிலும் பணியாற்றி உள்ளார். பிறகு கந்தசாமி சிபிஐயில் சென்னை டிஐஜியாகவும், மும்பையில் சிபிஐ இணை இயக்குனராகவும் இருந்துள்ளார்.
நாட்டையே உலுக்கிய குஜராத் சொராபுதீன் ஷேக் என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்போதைய குஜராத் மாநில உள்துறை அமைச்சர் அமித்ஷாவை 2010ஆம் ஆண்டு கைது செய்த போது சிபிஐ அமைத்த தனிப்படையில் டிஐஜி கந்தசாமியும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல கேரளாவில் தற்போதைய முதல்வர் பினராயி விஜயன் தொடர்புடைய லால்வின் ஊழல் வழக்கை விசாரித்தவரும் டிஜிபி கந்தசாமிதான். முன்னதாக 2007-ல் கோவாவில் பிரிட்டிஷ் இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து குற்றவாளிகளை கைது செய்ததும் கந்தசாமி தலைமையிலான தனிப்படை தான்.