சென்னை மெரினா கடற்கரையில் தோன்றிய டஸ்ட் டெவில்! வியப்பில் வீடியோ எடுத்த மக்கள்.. சென்னை:எப்போதும் பரபரப்பாக காணப்படும் மெரினா கடற்கரை பகுதியில் மக்கள் காற்று வாங்குவதற்காக மணல் பரப்பிலும், அங்குள்ள சர்வீஸ் சாலையிலும் அமர்ந்திருப்பது வழக்கம். அவ்வாறு நேற்று அமர்ந்திருக்கையில், இரவு 10 மணியளவில் திடீரென கடற்கரையின் மணல் பரப்பிலிருந்து சூறாவளி போன்ற பெரிய அளவிலான சுழல் ஒன்று உருவானது.
மணல் பரப்பில் ஆரம்பித்த அந்த சுழல், நகர்ந்து வந்து அங்கிருந்த சில கடைகளை தாக்கிவிட்டு, பின் சாலையை நோக்கி சென்றுள்ளது. இது என்னவென்று தெரியாமல் குழம்பிய நிலையில் இருந்த பொதுமக்கள், அதனை தங்கள் ஸ்மார்ட் போனில் வீடியோ எடுத்தனர்.
இது பற்றி அங்கிருந்தவர்கள் கூறுகையில், “மெரினா கடற்கரையில் இரவு நாங்கள் நின்று கொண்டிருந்தபோது திடீரென மணல் பரப்பிலிருந்து சூறாவளிபோல் ஒன்று உருவாகி, அங்கிருந்த இரண்டு மூன்று கடைகளை கீழே தள்ளிவிட்டு, பின்பு மணல் பரப்பின் மேல் அப்படியே சென்றுவிட்டது. இது எங்களுக்கு புதிதாக இருந்தது. மேலும், இது சூறாவளியா, இல்லை அமெரிக்காவில் உருவாகும் டொரண்டோ போன்ற ஒன்றா என்று தெரியவில்லை” என கூறினர்.
இதையும் படிங்க: Flood in kumbakarai falls: கும்பக்கரை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு.. 5வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!
இது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் கூறுகையில், “இது சூறாவளி இல்லை, இயற்கை நிகழ்வுதான். இது டஸ்ட் டெவில் என்று அழைக்கப்படும். இந்நிகழ்வு அவ்வப்போது நடைபெறும். ஆனால் பலரும் இதை கவனிப்பதில்லை. இது பெரும்பாலும் பகல் நேரத்தில் நடைபெறும்.
ஒரு மேற்பரப்பு வெப்பம் அடையும்போது, அந்த வெப்பத்தால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குளிர்ந்த காற்று உருவாகும். இந்த குளிர்ந்த காற்றுடன் சூடான காற்று ஒன்றுக்கொன்று மோதும்போது மேற்பரப்புக்கு அருகில் ஒரு வெற்றிடத்தை உருவாக்குகிறது.
இந்த வெற்றிடத்தை விட்டு வெளியேறும்போது இது குறைந்த தாழ்வழுத்த பகுதியை உருவாக்குகிறது. மேலும், இந்த வெற்றிடத்தை நிரப்ப காற்று அந்த வெற்றிடத்தை நோக்கி பயணிக்கும்போது இது போல் நிகழும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: காற்றாலை மீது விழுந்த இடி! பற்றி எரிந்த காற்றாலை - பெரும் சேதம் தவிர்ப்பு!