இது குறித்த அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் இச்சூழலில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது நோய் தொற்று பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்த பேருதவியாக இருக்கும். எளியோரின் பசிதீர்க்கும் அம்மா உணவகங்கள் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டிருப்பதையும், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதையும் வரவேற்கிறேன்.
மே-10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதாலும், இன்றும், நாளையும் கடைகள் திறந்திருக்கும் என்பதாலும் பொதுமக்கள் அவசரம் கொள்ளாமல், கூட்டம் கூடுதலை தவிர்த்து பொறுமையாக சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
காய்ச்சல் போன்ற ஏதேனும் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்து கொள்வதும் மிகவும் அவசியம். அரசு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் ஏழை எளிய பொதுமக்கள், அவசர மருத்துவ சிகிச்சை, அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல ஏதுவாக வாடகை கார், ஆட்டோக்கள் 24 மணி நேரமும் இயங்குவதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
மேலும் மினி கிளினிக்குகளின் எண்ணிக்கையையும், அதில் தற்காலிக மருத்துவர்களின் நியமனத்தையும் அதிகரித்து 24 மணிநேரமும் இயங்க செய்தால் பெரிய அரசு மருத்துவமனைகளில் கூட்டம் குறையும். நோயாளிகளின் சிரமமும் களையப்படும்.