சென்னை:அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டம் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இன்று (ஜனவரி 3) நடைபெற்றது.
பின் செய்தியாளரைச் சந்தித்த செந்தில்பாலாஜி, "கடந்த பேரவைக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் தொடர்பான நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நான்கு காலத்தில் ஏழாயிரத்திற்கும் அதிகமான மின்மாற்றிகள் மாற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள ஆயிரத்து 72 மின்மாற்றிகள் விரைவில் மாற்றப்படும்.
ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்
மார்ச் மாதத்திற்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் பணி நிறைவேற்றப்படும். அறிவிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களுக்குமான நடவடிக்கைகளையும் விரைவாக நடத்தி முடிக்க பணிகள் நடைபெற்றுவருகின்றன.
ஐந்தாயிரத்து 300 கடைகள் உள்ள நிலையில், மூன்றாயிரம் கடைகளுக்கு மட்டுமே டெண்டர் போடப்பட்டுள்ளது. 11 ஆயிரத்து 715 விண்ணப்பங்கள் வந்துள்ளன. கட்சிப் பாகுபாடின்றி வெளிப்படைத்தன்மையுடன் டெண்டர் நடைபெறும்.
2019ஆம் ஆண்டு 66 விதிமுறைகள் இருந்தன; அவையேதான் தற்போதும் கேட்கப்பட்டுள்ளன. கரோனா காலம் என்பதால் கூடுதலாக இரண்டு விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. முழு ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டுதான் விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.
யாருடைய டெண்டரும் வாங்க மறுக்கவோ, டெண்டர் பிரிக்காமலோ இல்லை. கடந்த ஆட்சியில் ஒரு சிலருக்கு உரிய வழிமுறைகள் இல்லாமல், கடைகள் நடத்த அனுமதி அளித்ததால், மின்சாரத் துறைக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது.
கோடை காலத்தில் மின் பற்றாக்குறை இல்லை
கோடை காலத்தில் மின் பற்றாக்குறை இல்லாத அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. மழைக்குப் பின் விரைவாக மின்சாரம் வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோடை காலத்திற்குத் தேவையான மின் உற்பத்தி தற்போது உள்ளது.
90% புகார்கள் தீர்க்கப்பட்டன
புதிய நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மின் விநியோகம் செய்யும் நடவடிக்கைகளை துறை மேற்கொள்ளும். இதுவரை 90 விழுக்காடு அளவிற்கு மின்னகத்திற்கு வந்த புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன.