தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட தடுப்பணைகள் எத்தனை?' - துரைமுருகன் கேள்வி

சென்னை: கடந்த எட்டு ஆண்டு கால அதிமுக ஆட்சியில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Durai Murugan

By

Published : Sep 29, 2019, 11:23 AM IST

இது தொடர்பாக தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும், திமுக பொருளாளருமான துரைமுருகன் விடுத்துள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம் - வீரபாண்டி தொகுதியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரிப் பிரச்னை குறித்து முழு விவரம் தெரியாமல் உளறிக் கொட்டியிருக்கிறார்.

காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீர், அதிமுக அரசின் அக்கறையின்மையாலும் - நிர்வாகத் திறமைக் குறைவினாலும் வீணாகக் கடலில் கலக்கிறது. காவிரி கடந்து வரும் வழியில், அதனைத் தடுத்து சேமித்து வைக்க அதிமுக அரசிடம் உருப்படியான திட்டம் ஏதும் இல்லை என எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எனும் பொறுப்புக்கே உரிய அக்கறையில் தமது கவலையை வெளியிட்டிருந்தார்.

அதற்குப் பதில் கூறுவதாக எண்ணிக்கொண்டு, நேற்று சேலம் நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “எங்களைக் குறை கூறும் திமுகவினர், தங்கள் ஆட்சியில், காவிரியில் ஒரு தடுப்பணையாவது கட்டியதுண்டா?" - எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவருக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவது, திமுக ஆட்சியில் காவிரியில் மாயனூர் எனும் இடத்தில் நாங்கள் தடுப்பணை கட்டியுள்ளோம். அந்த விபரம் கூடத் தெரியாமல், பொதுப் பணித் துறையையும் தன் பொறுப்பில் வைத்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உண்மைக்குப் புறம்பாகப் பேசலாமா?

அந்தக் காலகட்டத் தேவைக்கேற்ப மாயனூரில் திமுக அரசால் தடுப்பணை கட்டப்பட்டது. அப்போது, மேலும் தடுப்பணைகள் கட்டுவதற்கான தேவை ஏற்படவில்லை. தேவை இருந்திருப்பின், அப்போதைய முதலமைச்சராக இருந்த எங்கள் தலைவர் கலைஞர் கருணாநிதி, அதற்கு உடனே அனுமதி வழங்கி, நிதி ஒதுக்கி, பணியினை முடுக்கி விட்டிருப்பார்கள். எனவே, காவிரியின் நலம் பேணியதில் திமுக அரசைக் குறை கூற எடப்பாடிக்கு எள்ளளவும் அருகதை இல்லை. நான் கேட்கிறேன், அதிமுக ஆட்சி நடைபெறும் கடந்த எட்டாண்டுகளில் காவிரியில் எத்தனை தடுப்பணைகள் நீங்கள் கட்டியுள்ளீர்கள்?

மற்றும் ஓர் கேள்வி, திமுக ஆட்சிக் காலங்களின்போது தமிழ்நாட்டில் 40க்கும் மேற்பட்ட அணைகளை நாங்கள் கட்டியுள்ளோம். இதுகாறும் நடந்த அதிமுக ஆட்சிகளில் கட்டப்பட்ட அணை என, ஒரே ஒரு அணையையாவது உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா? எதிர்க்கட்சித் தலைவர் கூறிய குற்றச்சாட்டுக்கு, பதிலேதும் இருந்தால் - இன்னின்ன இடங்களில் நாங்கள் தடுப்பணை கட்டி வருகிறோம் அல்லது கட்டத் திட்டமிட்டுள்ளோம் என, ஆதாரங்களுடன் தெரிவியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "முதலமைச்சர் மக்களிடம் சொல்லிவிட்டா வெளிநாடு சென்றார்?" - லந்தைக் கொடுத்த துரைமுருகன்!

ABOUT THE AUTHOR

...view details