குழந்தைகள் ஆபாசப் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகம் எனவும், அதிலும் குறிப்பாக தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும் அமெரிக்க புலனாய்வுத் துறை அமைப்பு ஒன்று அறிக்கையை வெளியிட்டிருந்தது.
இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில், குழந்தைகள் ஆபாசப் படம் பார்ப்பவர், பதிவிறக்கம் செய்பவர், வைத்திருப்பவர் என அனைவரின் தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் எனவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபி ரவி தெரிவித்தார்.
ஐபி எண்ணை வைத்து குழந்தைகளின் ஆபாசப் படத்தைப் பார்ப்பவர்களின் பட்டியலை தயாரித்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் அனுப்பி வைத்தனர். இதன் அடிப்படையில், குழந்தைகள் ஆபாசப் படம் பார்த்த கோவை, சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும், பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டனர். காவல் துறையினர் எடுத்த இந்த நடவடிக்கையால் அவமானத்திற்குப் பயந்து குழந்தைகள் ஆபாசப் படம் பார்ப்போரின் எண்ணிக்கை குறைந்து வந்தது.
இந்நிலையில், கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதனால் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள் என அனைத்தையும் ஊரடங்கு முடியும் வரை திறக்க அரசு தடை விதித்துள்ளது. பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகள் தவிர, வீட்டை விட்டு ஒருவரும் வெளியே வரக் கூடாது எனவும் எச்சரித்து உள்ளனர்.
இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே பொழுதைக் கழித்து வருகின்றனர். மேலும் தொலைக்காட்சியைப் பார்த்து சலித்துப் போனதால், செல்போனில் பெரும்பாலானோர் ஆபாசப் படத்தை பார்த்து வருகின்றனர். காவல் துறையினர் அனைவரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருவதால், குழந்தைகள் ஆபாசப் படம் பார்ப்பதைப் பற்றி, நோட்டமிட மாட்டார்கள் என்று எண்ணி பலர் பார்த்து வருகின்றனர்.