சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, " கடந்த 24 மணி நேரத்தில், 38 மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. மாநிலத்தின் சராசரி மழை அளவு 21.02 மி.மீட்டர். செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக 130.64 மி.மீட்டர் பதிவாகியுள்ளது. இரண்டு இடங்களில் அதி கனமழையும், 19 இடங்களில் மிக கன மழையும், 39 இடங்களில் கன மழையும் பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை 01.10.2021 முதல் 11.11.2021 வரை 405.12 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 260.0 மி.மீட்டரை விட 56 விழுக்காடு கூடுதல் ஆகும்.
பேரிடர்களின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு, தேசிய பேரிடர் மீட்பு படையின் 10 குழுக்கள், கடலூர், நாகப்பட்டினம், மதுரை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தலா ஒரு குழுவும், செங்கல்பட்டு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு தலா மூன்று குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் தலா இரண்டு குழுக்கள் தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நிவாரண முகாம்களின் விபரம்
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்களில் மொத்தம் 162 முகாம்களில், 9312 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 1961 நபர்கள் 41 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 21,02,420 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னையில் தொடர் மழை காரணமாக வெளியில் வர இயலாத நிலையில் உள்ள பொது மக்களுக்கு உணவு வழங்குவதை உறுதி செய்ய வார்டுக்கு ஒருவர் வீதம் 200 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவருடன் இணைந்து இந்த பணிகளைக் கண்காணிக்க 15 மண்டலங்களுக்கும் உதவி வருவாய் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம்
கடந்த 24 மணி நேரத்தில், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.157 கால்நடை இறப்பு பதிவாகியுள்ளது. 1,072 குடிசைகள் பகுதியாகவும், 74 குடிசைகள் முழுமையாகவும் ஆக மொத்தம் 1,146 குடிசைகளும், 236 வீடுகள் பகுதியாகவும், 1 வீடு முழுமையாகவும் ஆக மொத்தம் 237 வீடுகளும் சேதமடைந்துள்ளன.