சென்னை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,"தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்:
ஜனவரி 09: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
ஜனவரி 10: தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில், தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில், வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து உள்ளது. இதில் அதிகபட்சமாக, மரக்காணத்தில் 19 செ.மீ மழையும், செய்யூர் 13 செ.மீ மழையும், செங்கல்பட்டு 12 செ.மீ மழையும், திண்டிவனம் 9 செ.மீ மழையும் தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களில் 7 செ.மீ முதல் 1 செ.மீ வரை மழைப் பதிவாகி உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: நாளை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஜனவரி 11: குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தாமிரபணியில் வெள்ள அபாய எச்சரிக்கை:
இதனிடையே, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தாமிரபரணி கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தூத்துக்குடி ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்
இதையும் படிங்க:கோவில்பட்டியில் பயணிகளை பாதியிலே இறக்கிவிட்ட அரசுப் பேருந்து!