சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமான நிலையில் நேற்று அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சலசலப்புகளுடன் முடிவடைந்த அக்கூட்டம் சட்டத்திற்கு புறம்பானது என ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ குற்றஞ்சாட்டிய நிலையில் அதனை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மறுத்துள்ளார்.
பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஓ.பன்னீர் செல்வம் தரப்பின் குற்றச்சாட்டுகளுக்கு ஒவ்வொன்றாக பதிலளித்தார்.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே பொதுக்குழு நடைபெற்றதாகவும் , அதில் எவ்வித சட்ட விதிமீறலும் இல்லை என சிவி சண்முகம் தெரிவித்தார். கட்சி விதி 19ல் பொதுச் செயலாளர், ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் பொதுக்குழுவை கூட்டலாம் என்று உள்ளது; மேலும் பொதுழுக்குழு உறுப்பினர்கள் 5ல் ஒரு பங்கு கையெழுத்திட்டு தலைமையிடம் ஒப்படைத்தால் போதுமானது. 30 நாட்களுக்கு பொதுக்குழு நடத்த வேண்டும் என்பது கட்டாயம்; எனவே கழக விதிப்படி தான் பொதுக்குழு கூட்டப்பட்டதாக கூறினார்
மேலும் உட்கட்சி விவகாரங்களில் தலையிட போவதில்லை, பொதுக்குழுவை நடத்தி கொள்ளலாம் என உயர்நீதிமன்றம் அனுமதித்த நிலையில், அனைத்து உத்தரவுகளையும் பின்பற்றியே பொதுக்குழு நடத்தப்பட்டதாக சிவி சண்முகம் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் தான் உட்கட்சி விவகாரங்களில் தலையிடும் என குறிப்பிட்ட அவர் , ஓ பன்னீர் செல்வம் விதிகளை பின்பற்றி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றார்.
அவைத் தலைவர் தேர்வு குறித்து விளக்கிய சிவி சண்முகம் , கழக பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தவரை அவராகவே அவைத் தலைவரை தேர்ந்தெடுத்தார்; தற்போது கட்சி ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் தான் அவைத் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என அவசியமில்லை ; பொதுக்குழு உறுப்பினர்கள் அவைத் தலைவரை தேர்ந்தெடுத்தால் போதுமானது என்றார்.