சென்னை: டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்து எனது படைப்புகள் நீக்கப்பட்டதற்கு சாதிய அரசியலும், அதற்கு பின்னால் இருக்கும் மதமும்தான் காரணம். எனவே இதனை மதவாத அரசியலாகத்தான் பார்க்கிறேன் என எழுத்தாளர் சுகிர்தராணி தெரிவித்தார்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து தமிழ்நாட்டை சேர்ந்த தலித் எழுத்தாளர்கள் சுகிர்தராணி, பாமா ஆகியோரின் படைப்புகள் நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தங்களுக்கு எந்தவிதமான தகவலும் அளிக்கவில்லை எனவும், அதே நேரத்தில் தங்களின் படைப்புகள் நீக்கப்பட்டாலும், வேறு தலித் எழுத்தாளரின் படைப்புகளை வைக்க வேண்டும் எனவும் இவர்கள் வலியுறுத்துகின்றனர். சாதிய அரசியல் தான் காரணம்:
டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து தனது படைப்புகள் நீக்கப்பட்டது குறித்து ஈடிவி பாரத்திற்கு சுகிர்தராணி அளித்த சிறப்பு பேட்டியில், டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கில இலக்கியத்துறை இளங்கலையில் எனது 2 கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டிருந்தது.
கைமாறு என்ற தலைப்பில் மலம் அள்ளும் மக்களைப் பற்றிய கவிதை, என் உடல் தலைப்பில் பெண்களின் உடலுக்கு நிகழ்த்தப்படும் வன்முறை குறித்த கவிதை. இந்த 2 கவிதைகளும் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது குறித்து எந்தவிதமான தகவலும் எனக்கு தெரிவிக்கப்படவில்லை. இது முறையற்ற செயலாகும்.
தலித் எழுத்தாளர்களின் படைப்புகள் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டதை பாராட்ட வேண்டும். பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியதால் மட்டுமே நாம் குறை கூற முடியாது. நீக்கப்பட்டதற்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் இருப்பதாகத்தான் நான் பார்க்கிறேன்.
தமிழ்நாட்டில் இருந்து சக எழுத்தாளரும், மூத்த எழுத்தாளருமான பாமாவின் ‘சங்கதி’ என்ற படைப்பும் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டடுள்ளது. இது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியாகத்தான் நான் பார்க்கிறேன். ஆனால், அதே நேரத்தில் இதில் அதிர்ச்சி எதுவும் கிடையாது. ஏனென்றால் தொடர்ந்து தலித்துகளின் குரல் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் படைப்புகளுக்கு அரசும் அங்கீகாரம் அளிக்கவில்லை. முற்போக்குவாதிகள் அங்கீகாரம் அளிக்கின்றனர். இதற்கும் காரணம் சாதிய அரசியல் தான்.
மதவாத அரசியல்:
பாமா, மகாஸ்வேதா தேவி மற்றும் என்னுடைய படைப்புகள் என அனைத்தும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக, அந்த மக்களுக்கான குரலாகவும், விளிம்பு நிலை மக்களுக்கான குரலாக இருக்கின்றன.
இதனை ஒழித்து விட்டால், இந்தியா என்பது சாதிய சமூகம் கிடையாது, மதவாத அரசு கிடையாது என்பதை வெளி உலகத்திற்கு காட்டுவதற்கான முயற்சியில் கூட இவை நீக்கப்பட்டு இருக்கலாம்.
ஒடுக்கப்படும் மக்களின் குரல் ஒலிக்க தடை: கோபத்தில் கவிஞர் சுகிர்தராணி சாதிய அரசியல் என்பதற்கான முடிவுக்கு வருவதற்கு காரணம், எங்களின் படைப்புகளை எடுத்து விட்டு, வேறு தலித் எழுத்தாளரின் படைப்புகளை வைத்திருக்கலாம். ஆனால், அவர்கள் அப்படி செய்யவில்லை. எதிர்க்குரலாக, கலகக் குரலாக இருக்கக்கூடிய எழுத்தாளர்களின் படைப்புகளை நீக்கி விட்டு, அந்த இடத்தில் அரசின் கொள்கை, கோட்பாடு, இந்துத்துவா கொள்கைக்கு இசைந்து எழுதும் படைப்பாளர்களின் எழுத்துகளை கொண்டு வந்து வைப்பதன் மூலம், தொடர்ந்து சமூகத்தில் எதிர்க்குரலாக இருப்பவர்களின் படைப்புகளை நசுக்குகின்றனர். இதற்கு காரணம் சாதிய அரசியலும், அதற்கு பின்னால் இருக்கும் மதமும் தான். எனவே இதனை மதவாத அரசியலாகத்தான் பார்க்கிறேன்.
கைமாறு, சங்கதி சொல்லும் அரசியல்:
கைமாறு என்ற கவிதையில் மலம் அள்ளும் தொழிலாளியின் அவல நிலையை எடுத்துக் கூறியுள்ளேன். மலம் அள்ளிய கூடையை சுமந்து செல்லும் தொழிலாளிக்கு கைமாறாக ஒரு வேளை மலம் கழிக்காமல் இருந்திருக்க முடியுமோ என்பதைத் தான் கூறியிருந்தேன். தற்பொழுது தொழில்நுட்பம் வளர்ந்து இருந்தாலும், இன்னும் மனிதர்கள் மலம் அள்ளும் தொழில் இருக்கத்தான் செய்கிறது. மேலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அளிக்கும் ஊதியத்தைவிட அதிகளவில் மலம் அள்ளும் தொழிலாளிக்கு அளிக்கலாம். மனிதர்கள் மலம் அள்ளும் நிலைமை தொடர்வதைத் தான் அதில் குறிப்பிட்டுள்ளேன்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், விளிம்பு நிலை மக்களுக்காகவும் எழுதுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எங்கள் குரல் வெளிவரவே கூடாது என்பது தான் கருத்தாக இருக்கிறது. எனவே சமூகத்தை நேசிக்கிறவர்கள், இது போன்ற சமூகத்தின் உண்மை நிலையை உணர்ந்தவர்கள், முற்போக்கு தளத்தில் இயங்கக்கூடிய சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெண்ணியவாதிகள் உட்பட அனைவரும் கேள்வி எழுப்ப வேண்டும் என்றார்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து பாமாவின் படைப்பு நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த சுகிர்தா, மத்திய அரசு புதியக் கல்விக் கொள்கையை செயல்படுத்துவதால், எனது படைப்பு மட்டும் இல்லாமல் தலித், பழங்குடியினர் குறித்து எழுதிய அனைவரின் படைப்புகளையும் நீக்கி உள்ளனர். படைப்புகளை நீக்கியது குறித்து எனக்கு எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை. சனாதன கும்பலிடம் இதைத் தான் எதிர்பார்க்க முடியும். இது குறித்து வருத்தப்படுவதை விட கோபம் தான் வருகிறது. மதச்சார்புள்ள ஒரு அரசு விளிம்புநிலை மக்களின் குரல் வெளியில் வந்துவிட கூடாது என்பதற்காக எங்கள் படைப்பை நீக்கி உள்ளனர்.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் குரல் கொடுக்க வேண்டும்:
புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் சமூக மாற்றத்திற்கு முக்கியமானதாக கருதுபவற்றை நீக்கி உள்ளனர். பாமாவின் ’சங்கதி’ முழுக்க முழுக்க சமுதாய ஒடுக்குமுறை, சாதி ரீதியாக, மத ரீதியாக, ஒடுக்கப்பட்ட பெண்கள் குறித்து பேசுகிறது. அதனை அவர்கள் படிக்கும்போது, பெண்களுக்கு உத்வேகம் பிறக்கும். பெண்களை அடக்கும் சமுதாயத்தினை மாற்ற வேண்டும்; நாமும் ஒரு மனிதப் பிறவி என்ற வேகம் வரும். இது போன்ற உணர்வு வரக் கூடாது என்பதற்காகத்தான் இதை நீக்கி உள்ளதாக கருதுகிறேன்.
மத்திய அரசு சமுதாய மாற்றத்தை விரும்பவில்லை. புதிய கல்விக் கொள்கை மூலம் சமுதாயத்தை பின்னோக்கி எடுத்துச் செல்ல பார்க்கிறது. அவர்கள் அடக்க அடக்க இது பீறிட்டுத் தான் எழும். இதனால் அது அடங்கி போகாது.
சமத்துவ சமுதாயத்தை விரும்புகிற, சமூக மாற்றத்தை விரும்புகிற, மதச்சார்பற்ற கொள்கை உடைய அனைவரும் இதனை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். தலித்துகள், ஒடுக்கப்பட்டவர்கள் மட்டும் குரல் கொடுக்க வேண்டும் என்ற நிலை இல்லை. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் இதனை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க:Tamil அல்ல Tamizh - ழகரத்தின் சிறப்பை உறுதிசெய்ய வெற்றியழகன் எம்எல்ஏ கோரிக்கை