பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்பிற்கான தேர்வினை அரசுத் தேர்வுத் துறை நடத்திவருகிறது.
கடந்த ஜூன் மாதம் ஆசிரியர் பயிற்சிக்கான முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடந்தன. இந்தத் தேர்வுகளில் நான்காயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். இதன் முடிவுகள் நாளை (அக். 22ஆம் தேதி) பிற்பகல் வெளியிடப்படும் எனத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இதற்கிடையே தேர்வெழுதிய நான்காயிரம் மாணவர்களில் வெறும் 105 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தேர்வுத் துறை அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளது. முதலாம் ஆண்டு தேர்வெழுதிய மாணவர்களில் வெறும் 75 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக வெளியான தகவலால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே ஆசிரியர் பயிற்சி படிப்பில் மாணவர்களின் சேர்க்கை குறைந்துவரும் நிலையில், மாணவர்கள் தேர்ச்சி அடையாமல் இருப்பது தேர்வுத் துறையையும் கல்வித் துறையையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.