சென்னை:வேகமெடுக்கும் கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் காவல்துறை சார்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக வாகனச் சோதனை சாவடி அமைத்து முகக் கவசம் அணியாமல் செல்லக்கூடிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதத் தொகையை வசூல் செய்து வருகின்றனர்.
வாக்குவாதம்
சென்னை அண்ணா நகர் காவல் நிலைய காவல்துறை 3வது அவென்யூவில் ஜன.21ஆம் தேதியான இன்று வாகன சோதனைச் சாவடி அமைத்து, முகக்கவசம் அணியாமல் செல்லக்கூடிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதத் தொகையை வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அவ்வழியாக முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி, முகக் கவசம் அணியாமல் சென்றதற்கு அபராதத்தொகையை செலுத்துமாறு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி கேட்டுள்ளார்.
கலாட்டாவில் ஈடுபட்ட டி.எஸ்.பி சபாபதி அதற்கு அந்த நபர் '3 முறை கரோனா தடுப்பூசி செலுத்தியாச்சு, எதற்கு முகக்கவசம் அணிய வேண்டும்' என உதவி ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர், அபராதம் விதித்து செலான் கொடுப்பதற்கு உதவி ஆய்வாளர் முயன்ற போது, 'செலான் போடும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது' என அந்த நபர் உதவி ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாகனம் பறிமுதல்
அந்த நபரின் இருசக்கர வாகனத்தை, உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வைரலாகி வருகிறது.
இதனடிப்படையில் விசாரணையில் மேற்கொண்டபோது, வாக்குவாதத்தில் ஈடுபட்டவர் தஞ்சாவூர் காவல்துறை பயிற்சி கல்லூரியில் பணியில் இருக்கக்கூடிய சபாபதி என்பது தெரிந்தது.
அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டிற்கு விடுமுறையைக் கழிக்க வந்ததும் தெரியவந்தது. இந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு, சபாபதி மீது துறை ரீதியான விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் சர்ச்சை
ஏற்கெனவே முகக்கவசம் அணியாமல் சென்றதாகச் சட்டக்கல்லூரி மாணவர் தாக்கிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதற்கு இடையே தற்போது காவல் துறை பயிற்சி கல்லூரியில் பணிபுரியும் நபரே இது போன்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவது பேசுபொருளாக மாறி உள்ளது.
மேலும் பொதுமக்களுக்கு முகக் கவசம் அணியவேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் காவல்துறையினரே முகக் கவசம் அணியாமல் செல்வது வருத்தத்திற்குரியது.
இதையும் படிங்க: ஆறே நாளில் ரூ.2.36 கோடி வசூல் - வணிக வரித்துறையின் நுண்ணறிவுப் பிரிவு