சென்னை:வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரள பகுதிகளில் இருந்து இன்று (ஜன.14) விலகியது. இந்நிலையில், 14ஆம் தேதியான இன்று முதல் 17ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 18ஆம் தேதி தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை 3 நாட்கள் வரை, தென் தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதர பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை அதிகாலை லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை வானிலை:சென்னையைப் பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஓட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்) ஏதுமில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:இன்று வடமேற்கு பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:களைகட்டும் பொங்கல் பண்டிகை! தமிழர் வீரம் பேசும் ஜல்லிக்கட்டு! குதூகலம் அடையும் கொண்டாட்டங்கள்!