சென்னை:மணிப்பூர் மற்றும்சென்னையில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் இருந்து 15.8 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், போதைப் பொருளை இலங்கைக்கு கடத்த முயன்றதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
சென்னையில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக, மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சென்னை மண்டல அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் சுமார் 280 கோடி மதிப்புள்ள 54 கிலோ மெத்தம் பெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்து, கடத்தல் கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 21ஆம் தேதி, மத்திய போதைப் பொருள் கடத்தல் பிரிவு சென்னை மண்டல அதிகாரிகள் 4.8 கிலோ மெத்தம் பெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்து, இது தொடர்பாக ஒரு பெண் உட்பட நான்கு பேரை சென்னையில் கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நபர்களிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், மணிப்பூரில் உள்ள மோரே என்ற மியான்மர் எல்லையில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சென்னை மண்டலம் மற்றும் பெங்களூரு மண்டல மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஒன்றிணைந்து, குழு அமைத்து மணிப்பூர் மாநிலம் இம்பாலுக்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.