சென்னை மயிலாப்பூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விலையுயர்ந்த போதைப்பொருள்கள் விற்பனை செய்துவருவதாக அப்பகுதி காவல் துறையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஐஸ் பகுதி பெரிய தெருவில் சந்தேகிக்கும் வகையில் சுற்றித் திரிந்த கல்லூரி மாணவர்கள் இருவரைப் பிடித்து சோதனை செய்ததில் தடைசெய்யப்பட்ட கேட்டமைன் என்கிற போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் சேப்பாக்கத்தில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் ஒரு நபர் கிராம் கணக்கில் விற்பனை செய்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சேப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் லாட்ஜிற்கு சென்ற காவல் துறையினர் போதைப்பொருள் விற்றுவந்த ஊழியர் ஒருவரைக் கைதுசெய்தனர்.
மேலும் அவர் தங்கியிருந்த அறையில் சோதனை செய்ததில் சூட்கேஸ் ஒன்றில் இருந்த 370 கிராம் கேட்டமைன், 87 ஸ்டாம்ப் போதைப்பொருள், 33 போதை மாத்திரைகள், 11 கிராம் கஞ்சா, 4 செல்போன்கள், ஒரு எடை போடும் இயந்திரம், 2500 ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன. பறிமுதல்செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு ரூபாய் 10 லட்சம் எனத் தெரியவந்துள்ளது.