தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டீ தூள் பாக்கெட்களில் போதைப் பொருள் கடத்தல் - ரூ.9 கோடி போதைப் பொருள் சிக்கியதன் பின்னணி என்ன? - 300 கிராம் போதை பொருள்

வடமாநிலங்களில் இருந்து டீ தூள் பாக்கெட்டுகளில் போதைப் பொருள் கடத்தி விற்று வந்த பொறியியல் பட்டதாரி உள்பட முக்கிய நபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 9 கோடி ரூபாய் மதிப்பிலான மெதாபட்டமைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர்.

Etv BharatDrug trafficking in tea powder packets...Main culprits arrested...
Etv Bharatடீத்தூள் பாக்கெட்டுகளில் போதை பொருள் கடத்தல்...முக்கிய குற்றவாளிகள் கைது...

By

Published : Mar 25, 2023, 9:08 AM IST

சென்னை:ஆபரேஷன் கஞ்சா வேட்டை மற்றும் டிரைவ் அகைன்ஸ்ட் ட்ரக்ஸ் என்ற சிறப்பு நடவடிக்கைகள் மூலம் போதைப் பொருள் கட்டுப்படுத்துவதில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதன் அடிப்படையில் கடந்த (மார்ச் 14) அண்ணா சாலையில் போதைப் பொருள் கை மாறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீசார் போதைப் பொருள் கும்பலை பிடிக்கச் சென்றனர். அப்போது போதைப் பொருள் வாங்க வந்த சௌபர் சாதிக் மற்றும் வாசிம் ராஜா ஆகிய இருவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இவர்கள் இருவருக்கும் போதை பொருளை சப்ளை செய்த வேணுகோபால் மற்றும் டார்லிங் வின்சென்ட் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களிடம் இருந்து 300 கிராம் மெத்தப்பெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களுக்கு சப்ளை செய்யும் நபர் யார் என்பதை அறிந்த போலீசார், கைது செய்ய செல்லும் போது முக்கிய போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த நபர் தலைமறைவாகினார். குறிப்பாக முன்னர் கைது செய்த கும்பலை சேர்ந்த டார்லிங் வின்சென்ட் என்பவரின் மனைவி, செல்போன் சிக்னல் மூலம் போதைப் பொருள் கடத்தும் முக்கிய நபரை தப்பிக்க வைக்க உதவியதும் தெரிய வந்துள்ளது.

இருப்பினும், அந்த நபரின் செல்போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கு அடிக்கடி தொடர்பு கொண்டது தெரிய வந்துள்ளது. இதையறிந்த வடக்கு மண்டல தீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார், சந்திரசேகரை தீவிரமாக தேடி வந்தனர். திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் போலீசாரிடம் சிக்காமல் சுற்றி வந்த சந்திரசேகரை, மதுரையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த போது தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

காவல் துறையினர் வருவதை அறிந்து போதைப் பொருள் எதுவும் இல்லை என்பது போல் நாடகமாடி உள்ளார். அதன் பின் காவல் துறையினரின் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், ரகசிய வீடு ஒன்றில் போதைப் பொருளை பதுக்கி வைத்திருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். இந்த விசாரணையின் போது கடத்தலில் முக்கிய நபர் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானதாக போலீசார் கூறியுள்ளனர். சென்னையில் தனது வீட்டு பக்கத்தில் உள்ள, நந்தா என்கிற ராஜ்குமாரிடம் போதைப் பொருளை கொடுத்து வைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில், அந்த இடத்திற்குச் சென்று சோதனை செய்த போலீசார், மொத்தமாக 9 கிலோ மெத்தப்டமைன் போதை பொருள் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். மெத்தப்டமைன் என்ற போதை பொருளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தையும், எட்டு செல்போன் மற்றும் ஒரு டேப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த இருவர் குறித்து விசாரணை மேற்கொண்டதில், சந்திரசேகர் கோழி வியாபாரம் செய்து வருவதும், மேலும் ராஜ்குமார் பாக்கு, சிகரெட் போன்றவற்றை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் தொழில் மேற்கொள்வதும் தெரியவந்துள்ளது. இவ்வாறாக வடமாநிலத்தில் இருந்து போதைப் பொருளை கடத்தி வந்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்ற யோசனையில், போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதும் தெரிய வந்தது.

மேலும் இந்த இருவருக்கு, நாகாலாந்து மாநிலத்தில் நக்சலைட்டுகளுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் நெருக்கம் இருப்பதாகவும் அங்கிருந்து போதைப் பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி கடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர். குறிப்பாக டீ தூள் பாக்கெட்டுகளில் போதை பொருளை வைத்து, அதை சென்னைக்கு பேருந்துகள் மூலமாகவும், ரயில்கள் மூலமாகவும் கடத்தி வருவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 9 கிலோ 100 கிராம் மெத்தப்டமைன் போதைப் பொருளின் சந்தை மதிப்பு 9 கோடி ரூபாய் அளவு இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டு தலைமறைவான நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குறிப்பாக இந்த போதை பொருளை ஒரு கிராம் அளவில் எடுத்து அதற்காக கூல்டிரிங்ஸ் பாட்டில் செய்யப்பட்ட கருவி மூலம் போதைப் பொருளை கல்லூரி மாணவர்கள் எடுத்துக் கொள்வது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எவ்வாறு மாணவர்கள் இந்த போதைப் பொருளை பயன்படுத்துகிறார்கள் எனவும் காவல் துறையினர் விவரித்தனர். வட மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் இந்த போதைப் பொருளை ரகசிய வீடுகளில் பதுக்கி வைத்து சென்னையின் பல்வேறு இடங்களில் சில்லறை விற்பனைக்கு மாற்றுவது தெரிய வந்துள்ளது.

அதுவும், code word சொன்னால் மட்டுமே போதைப்பொருள் கைமாற்றப்படும் என்றும், போதைப்பொருள் விற்பனை செய்பவர் பத்து ரூபாய் கிடைக்குமா என தெரிவித்தால், போதைப் பொருள் வாங்குபவர் 20 ரூபாய் தருகிறேன் என கூற வேண்டுமாம். இவ்வாறு கூறினால் மட்டுமே போதைப் பொருள் சில்லரை விற்பனைக்காக கைமாற்றப்படும் என்றும் கூறியுள்ளனர். இவ்வாறாக கைமாற்றப்பட்ட போதை பொருளை, கிராம் அளவுகளில் பாக்கெட்டுகளாக மாற்றி சொகுசு பார்ட்டிகளுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் சென்னையில் விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக ஒரு கிராம் மெத்தப்படமைன் போதை பொருள் எட்டாயிரம் ரூபாய் அளவில் விற்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. இவ்வாறாக, கல்லூரி மாணவர்களை சீரழிக்கும் போதைப் பொருள் சில்லறை விற்பனை மற்றும் மொத்த விற்பனை கும்பலை சேர்ந்த ஆறு பேரை முதற்கட்டமாக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தனிப்படை போலீசார் தொடர் விசாரணையில் முக்கிய போதை பொருள் கடத்தும் நபரையும் வட மாநிலத்தில் போதைப் பொருள் விற்பனை செய்யும் தரகரையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:1.4 கிலோ தங்கத்தை திருடிய ஹெல்மெட் கொள்ளையர்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details