சென்னை: ஸ்ரீ சிவகுமார் கல்வி மற்றும் அறக்கட்டளை மற்றும் அகரம் பவுண்டேஷன் நடத்தும் 43ஆவது ஆண்டு விருது வழங்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சிவகுமார் மற்றும் கார்த்தி இருவரும் பங்கேற்றனர்.
அகரம் பவுண்டேஷனில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்புப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன. மேலும் ஓவியர் ராமுவுக்கு கௌரவம் செய்யப்பட்டது.
விழாவில் பேராசிரியர் கல்யாணி பேசுகையில், 'ஜெய்பீம் படத்திற்குப்பிறகு பழங்குடி மக்கள் பற்றிய பார்வை மாறிவிட்டது. நாங்கள் அரசு அலுவலர்களை தேடிச்செல்வதைத் தாண்டி அவர்கள் எங்களைத்தேடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவக்கல்வியையும் தமிழில் கொண்டுவர வேண்டும்' என்றார்.
விழாவில் நடிகர் கார்த்தி பேசுகையில், 'அகரம் சார்பில் 500 மாணவர்களுக்கு செல்போன் வாங்கிக்கொடுக்கப்பட்டது. செல்போன் டவரும் அமைத்துக்கொடுக்கப்பட்டது. 4000 குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் பள்ளிக்கட்டணம் செலுத்தப்பட்டது. சூர்யாவின் சொந்த பணத்தில் கொடுக்கப்பட்டது. ஏசி அறையில் படித்தவன் 100 மதிப்பெண் வாங்குவதை விட எதுவுமே இல்லாமல் படித்து 50 மதிப்பெண் பெறுவதே சிறப்பு என்பதை உணர்ந்தோம்.
அதன் பிறகே மதிப்பெண் அடிப்படையில் பரிசு வழங்குவதை நிறுத்தினோம். கரோனா காலகட்டத்தில் அகரத்தின் செயல்பாடு நிறுத்தப்படவில்லை. நீட் தேர்வு முதல்முறை எழுதியவர் தேர்ச்சி பெற்றதில்லை. இன்றும் கல்வி கிடைக்காதவர்கள் நிறைய இருக்கிறார்கள். அகரத்துடன் இணைந்து ஏராளமான கல்வி நிறுவனங்கள் ஆண்டுக்கு 400 சீட் கொடுக்கிறார்கள். மேலும் உணவும் தங்கும் விடுதியும் இலவசமாக கொடுக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.
அகரத்தில் படித்துவிட்டு வெளியே சென்ற மாணவர்களும் அவர்களது சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்து வருகிறார்கள் என்பதை கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. பள்ளி வரையிலும் இங்கு போதைப்பழக்கம் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. போதைப் பொருள் என்று தெரியாமலேயே பெட்டிக்கடைகளில் விற்கப்படுகின்றன. மாணவன் அமைதியாக இருக்கிறான் என்று நினைத்தால், வாயில் ஏதோ ஒன்றை வைத்துக்கொண்டு இருக்கிறான் என்று அர்த்தம். பெயரே தெரியாத போதைப்பொருள்கள் சமுதாயத்தில் உலா வருகின்றன.
கிராமங்களில் குழந்தைகள் எங்கு செல்கின்றனர், யாருடன் பேசுகின்றனர் என்பதைப் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். போதைப்பொருள் மூளையை மழுங்கடிக்கும் விஷயம். உங்களின் சிந்தனையும் தன்னம்பிக்கையும்தான் உங்களை எங்கேயோ கொண்டு செல்லும். அழகாக உடை அணிவது என்பது தகுதி கிடையாது' எனப் பேசினார்.
பள்ளி வரையிலும் போதைப்பழக்கம் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது - நடிகர் கார்த்தி நடிகர் சிவகுமார் பேசுகையில், 'கார்த்தி இங்கே பேசியது எனக்கே வியப்பாக உள்ளது. சூர்யாவை விட அருமையாக பேசிவிட்டார். எனக்கே பொறாமையாக உள்ளது. கல்வி, ஒழுக்கம் இருந்தால் எங்கு இருந்தாலும் சிறப்பானவராக மாறலாம். கிராமத்தில் பிறந்தவன் ஏழை, பணக்காரன் என்ற பேதம் எல்லாம் கிடையாது. கல்வி, ஒழுக்கம் இருந்தால் உயர்வடையலாம்’ என்றார்.
இதையும் படிங்க: தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் தொடங்கியது