சென்னை: தேனி மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரம் கிராமத்தில் அமைக்கவுள்ள நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்கும் திட்டத்தை கைவிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு இன்று (மார்ச். 14) கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "பொட்டிபுரம் கிராமத்தில் வனவிலங்குகள் மற்றும் பல்லுயிர் பெருக்கங்கள் அதிகமாக காணப்படுகின்றன. இந்தத் திட்டம் பலவீனமான மற்றும் உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்புக்கு மாற்ற முடியாத சேதத்தை ஏற்படுத்தும்.
நியூட்ரினோ திட்டத்திற்காக முன்மொழியப்பட்ட இடம், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தால் (NTCA) வரையறுக்கப்பட்ட மதிகெட்டான் - பெரியார் புலிகள் வழித்தடத்திற்குள் வருகிறது. இந்தப் பகுதி மரபணு ஓட்டத்தை பராமரிக்கும் முக்கியமான செயல்பாட்டைக் கொண்டுள்ளது.
சுரங்கப்பாதை பணி
தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) 2017 நவம்பர் 27 அன்று திட்ட முன்மொழிபவருக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்கான முன்மொழிவைச் செயல்படுத்தும் போது சில பின்விளைவுகளை சுட்டிக்காட்டியது. அதில் குறிப்பாக சுரங்கப்பாதை பணியானது கடினமான மற்றும் கலவையான பாறைகளில் வெடிப்பதை உள்ளடக்கியது. மலையை உடைக்க அதிக வலிமை கொண்ட வெடிபொருள்கள் தேவைப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும்.
பாறை உடைப்பு
சுரங்கப்பாதை மற்றும் குகை, மலை உச்சியில் இருந்து 1,000 மீட்டர் ஆழத்தில் இருக்கும். இந்த 1,000 மீட்டர் ஆழத்தில், மலைப்பாறை மிகப்பெரிய அழுத்தத்தின்கீழ் இருக்கும் மற்றும் செங்குத்து அழுத்தம் ஒரு சதுர மீட்டருக்கு 270 கிலோவிற்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாறை உடைப்பு, மேற்கூரை இடிந்து விழுவது போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
ஏராளமான தாவரங்கள்
தெற்கு - மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள போடி மலை, மேற்கு காப்பு வனப்பகுதிக்குள் திட்ட தளமும் வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகள் உலகளாவிய பல்லுயிர் மையமாகக் கருதப்படுகிறது. இந்த மலைகள் ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் உள்ளூர் இனங்களைக் கொண்டுள்ளது.
சிறிய ஓடைகள்
புலிகள் உள்ளிட்ட பாலூட்டிகள் இந்த மலைகளின் சரிவுகளில் சுற்றி வருகின்றன. இப்பகுதி சம்பல் ஆறு மற்றும் கொட்டக்குடி நதிக்கு குறிப்பிடத்தக்க நீர்பிடிப்புப் பகுதியாகவும் உள்ளது. போடி மலையின் மேற்குப்பகுதியில் உள்ள சிறிய ஓடைகள் கொட்டக்குடி ஆற்றில் இணைகின்றன. இது வைகை அணையில் கலக்கும் முன் பெரியாற்றில் கலக்கிறது. தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கு தண்ணீர் வழங்குவதுடன், உள்ளூர் சமூகங்களின் வாழ்வாதாரமாக இந்த நீர்நிலை உள்ளது.
எனவே, தாங்கள் இவ்விவகாரத்தில் தலையிட்டு, தமிழ்நாட்டில் நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தை கைவிடுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க:4 மாநில தேர்தல் வெற்றி... மக்களவை வந்த பிரதமர் "மோடி, மோடி..” என முழக்கமிட்ட எம்பி.க்கள்