மத்திய அரசு வாடகை கார் நிறுவனங்களை ஒழுங்குப்படுத்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அண்மையில் வெளியிட்டது. இதில், ஒரு பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் வசூல், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவற்றில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசின் இந்த நெறிமுறைகள் வாடகை கார் நிறுவனங்களுக்கு சாதகமாகவும், வாகன ஓட்டுநர்களுக்கு பாதகமாகவும் அமைந்துள்ளதாக ஓட்டுநர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
- குறைந்தபட்சம் 3 கி.மீ கட்டணத்தை அடிப்படை கட்டணமாகக் கொண்டு வாடிக்கையாளர்களிடம் நிறுவனங்கள் வசூலித்துக்கொள்ளலாம்.
- அதிக சவாரிகள் உள்ள நேரத்தில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தை 1.5 மடங்கு வரை உயர்த்தலாம்.
- சவாரிகள் குறைவாக உள்ள நேரங்களில் அடிப்படை கட்டணத்திலிருந்து 50 விழுக்காடு வரை குறைக்கலாம்
- அதிகபட்சமாக 20 விழுக்காடு தரகு தொகையை மட்டுமே எடுத்துக்கொண்டு, மீதமுள்ள 80 விழுக்காடு தொகையை ஓட்டுநருக்கு வழங்கவேண்டும்
- சக பயணிகளுடன் கட்டணத்தைப் பகிர்ந்து கொள்ளும் (ஷேர் டாக்ஸி) முறையில், பெண் ஒருவர் பயணிக்க வேண்டுமானால், அவர் பெண்கள் மட்டுமே பயணிக்கும் வாகனத்தில் மட்டுமே பயணிக்க முடியும்.
- ஷேர் டாக்ஸியில் முன்பதிவு செய்தவர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்தால், கட்டணத்திலிருந்து 10 விழுக்காட்டை வசூலிக்க ஓட்டுநர்களுக்கு உரிமை உண்டு
மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக சிலரிடம் பேசினோம். ஒரு சவாரியில் கி.மீ.,க்கு 25 முதல் 30 ரூபாய் வரை வசூலிக்கலாம் என புதிய விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வாடகை கார் ஓட்டுநர்கள் சங்க தலைவர் ஜூட் மேத்யூ, இப்படி வசூலித்தால் தங்களுக்கு நஷ்டம்தான் ஏற்படும் என வேதனைத் தெரிவிக்கிறார்.
யாருக்கு நஷ்டம்?
”50 விழுக்காடு வரை கட்டண சலுகை வழங்கலாம். தேவை அதிகரித்தால் 1.5 மடங்கு வரை கட்டணத்தை ஏற்றிக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. விலை குறைந்தால் ஓட்டுநர்கள் தான் நஷ்டப்படுவார்கள். விலையேற்றம் கண்டால் கார் வாடகை நிறுவனங்கள் லாபம் பெறும்” என்கிறார் ஜூட் மேத்யூ.
தொடர்ந்து பேசிய அவர், ”மொத்த விலை பணவீக்க குறையீட்டின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி செய்தால் டீசல் மீதான வரி, கூடுதல் செலவுகள் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. டீசலுக்கான உற்பத்தி விலையுடனும், கார்களுக்கான உற்பத்தி விலையும் கொண்டு கட்டணத்தை நிர்ணயிக்க முடியாது. சில்லறை விலைப் பணவீக்கத்தின் அடிப்படையிலேயே கட்டண நிர்யணம் இருக்க வேண்டும்.
மிளிரும் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும், வாகனங்களுக்கு மேல் விளக்கு பொருத்த வேண்டும் உள்ளிட்ட பல நடைமுறைகள் வாகன ஓட்டுநர்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது. குறிப்பாக யார் வேண்டுமானாலும் தங்களது கார்களில் பொதுமக்களை ஏற்றிச் செல்லலாம் என்பது புதிய விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
ஓட்டுநர்களுக்கு பாதகம்