சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அண்ணாசதுக்கம் நோக்கி வந்து கொண்டிருந்த தடம் எண் 2A பேருந்தில் பயணி ஒருவர், தீவுத்திடல் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்று நடத்துனரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், தீவுத்திடல் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல், காமராஜர் சாலையில் போர் நினைவுச் சின்னம் அருகே உள்ள சிக்னலில் நிறுத்தி, பயணியை இறங்கும்படி ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த பயணி, “பேருந்து நிலையத்தில் நிற்காமல் ஏன் நடுரோட்டில் இறக்கி விடுகிறீர்கள்?” என கேள்வி எழுப்பி உள்ளார். இது வாக்குவாதமாக தொடங்கி உள்ளது. இதனையடுத்து பேருந்தில் இருந்து இறங்கிய நடத்துனர் பயணியை தாக்கி உள்ளார்.
ஓட்டுநர், நடத்துனர், பயணி ஒருவருக்கொருவர் தாக்குதல் தொடர்ந்து ஓட்டுநரும் பயணியை தாக்கி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பயணியும், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகிய இருவரையும் தாக்கியுள்ளார். இவ்வாறு மூன்று பேரும் சாலையில் தாக்கி கொண்ட சம்பவத்தை அருகில் இருந்த காவலர்கள் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்ததாக தெரிகிறது.
மேலும் அருகிலுள்ள மரக் கிளைகளை உடைத்து பயணியை இருவரும் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பயணியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:வீடியோ: சென்னையில் தனியார் மருந்து குடோனில் பயங்கர தீ விபத்து